Year Ender 2025 - கம்பேக் கொடுக்க முடியாமல் திணறிய இயக்குநர்கள்.. இந்த வருடம் அவங்களுக்கு ரொம்ப மோசம்தான்
சென்னை: கோலிவுட்டில் இந்த வருடம் எக்கச்சக்க படங்கள் ரிலீஸாகின. அவற்றில் பெரிய இயக்குநர்களின் படங்களும் அடக்கம்; அறிமுக இயக்குநர்களின் படங்களும் அடக்கம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர்களின் படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. இனி அவர்களால் கம்பேக்கே கொடுக்க முடியாத என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் எழுப்பும் அளவுக்கு மோசமாக இருந்தது அவர்களது நிலைமை.
தமிழ் சினிமா ஒருகாலத்தில் இயக்குநர்களின் கைகளில் இருந்ததால்தான் தரமான படங்கள் வந்தன; காலப்போக்கில் அது ஹீரோக்களின் கைகளுக்கு சென்றுவிட்டதால் சொதப்ப ஆரம்பித்துவிட்டன என்ற விமர்சனம் சமீப காலமாக அதிகமாகவே எழுந்திருக்கின்றன. அந்த விமர்சனத்தை மாற்றும் வகையில் இந்த வருடத்தில் நல்ல படங்களும் வரத்தான் செய்தன. அந்தப் படங்களை எடுத்தவர்கள் எல்லாம் ஒன்று இந்த வருடத்தில் அறிமுகமானவர்களும் அல்லது சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமானவர்களும்தான். பெரிய இயக்குநர்கள், லெஜண்ட் இயக்குநர்கள் என்று கொண்டாடப்பட்டவர்கள் எல்லாம் இந்த வருடம் எடுத்த படங்கள் மோசமாகவே அமைந்தது என்பது சோக்மான உண்மை.
பாலாவின் வணங்கான்: இந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் இயக்குநர் பாலாதான். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் என்று கொண்டாடப்பட்டவர் இயக்குநர் பாலா. அவர் படம் எடுத்தாலே கண்டிப்பாக இதுவரை பார்க்காத மனிதர்களை பார்க்கப்போகிறோம்; இதுவரை உணராத வலியை உணரப்போகிறோம் என்ற நிலைமை இருந்தது. ஆனால் அதுவே அவரது டெம்ப்ளேட்டாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தார். அந்த சறுக்கலை அருண் விஜய்யை வைத்து இயக்கிய வணங்கான் படத்தில் சரிக்கட்டுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் படத்திலும் பாலா தனது வழக்கமான டெம்ப்ளேட்டை விட்டு வெளியே வரவில்லை. மாற்றுத்திறனாளிகளின் வலியை கடத்துகிறேன் என்கிற பெயரில் அவர்கள் தொடர்பான சில காட்சிகளை பாலா படமாக்கிய விதம் அபத்தமாக இருந்தது. முக்கியமாக வழக்கமான பாலாவின் ஹீரோக்கள் செய்யும் கொடூர கொலைகள், க்ளைமேக்ஸை அவர் முடித்த விதம் என ரசிகர்களுக்கு வணங்கான் ஒரு சலிப்பையே கொடுத்தது.

ஷங்கரின் கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கருக்கு கடந்த சில வருடங்களாகவே எதுவும் சரியில்லை. கடந்த வருடம் எடுத்த இந்தியன் 2 பயங்கர அடி வாங்கியது. அந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை வாங்கி கேம் சேஞ்சர் படத்தை எடுத்தார். கதை கார்த்திக்குடையது என்பதால் இது வழக்கமான ஷங்கர் பேட்டர்னில் இருக்காது என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள். ஷங்கரோ அதெல்லாம் இல்லை; எது இந்த உலகத்தில் மாறினாலும் என்னுடைய பேட்டர்னை மாற்றமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரைக்கதை எழுதியதாகவே இருந்தது.
படம் பார்த்த ரசிகர்களோ இந்த ஷங்கர் எப்போதுதான் மாறுவார்; இப்போது வந்த இயக்குநர்கள் எல்லாம் எவ்வளவு புதுமையாக கதையும் திரைக்கதையும் எழுதுகிறார்கள். இவர் இன்னமும் 90கள் ஸ்டைலிலேயே இருக்கிறாரே என்று நொந்துகொண்டார்கள். அதிலும் ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளையோ டான்ஸர்களையோ வைத்துக்கொண்டு பாடல் அல்லது காட்சியை எடுத்தால் பிரமாண்டம் என்ற மைண்ட் செட்டிலிருந்து எப்போது வெளியே வருவார் என்ற கேள்வியை ஆணித்தரமாக ரசிகர்களிடம் எழுப்பிவிட்டது கேம் சேஞ்சர் படம்.
ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி: ஏ.ஆர்.முருகதாஸும் இந்த வருடம் கம்பேக் கொடுக்க முடியாமல் சொதப்பிய இயக்குநர்கள் லிஸ்ட்டில்தான் இருக்கிறார். இந்த வருடம் அவர் எடுத்த சிக்கந்தர், மதராஸி ஆகிய இரண்டு படங்களுமே முருகதாஸின் பழைய லெவலுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். சிக்கந்தர் தோல்விக்கு சல்மான் மீது பழியை முருகதாஸ் போட்டாலும், ஒரு இயக்குநராக தான் தோல்வியடைந்ததை வெளியே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை என்பதை உள்ளுக்குள் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
சிக்கந்தர் படத்தைகூட தமிழ் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் மதராஸி படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார்கள். இந்த வருடம் வந்த மற்ற பெரிய இயக்குநர்கள், ஹீரோக்களின் படங்களை ஒப்பிடுகையில் மதராஸி ஓகே ரகமாக பட்டாலும்; கஜினி ஸ்டைலில் ஹீரோவுக்கு இருக்கும் ஒரு டிஸ் ஆர்டர், துப்பாக்கி ஸ்டைலில் க்ளைமேக்ஸ் சண்டை என தன்னுடைய பழைய ஃபார்மெட்டை பட்டி டிங்கரிங் பார்த்து டெலிவர் செய்துவிட்டதாகவே குரல்கள் எழுந்தன. இப்படி ஒருகாலத்தில் லெஜண்ட் இயக்குநர்கள் கொண்டாடப்பட்டவர்களின் படங்கள் இந்த வருடம் சொதப்ப; கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு அப்செட்டையே பரிசாக கொடுத்திருக்கிறார்கள். அடுத்த வருடமாவது அவர்கள் கம்பேக் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











