விபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்
திருச்சூர்: கேரளாவில் நடந்த கார் விபத்தில் இசையமைப்பாளர் பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார்.
12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார்.

லட்சுமி
பால பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை டிரைவர் அர்ஜுன் ஓட்டினார். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிபுரத்தில் வந்தபோது விபத்துக்குள்ளானது.

மகள் பலி
பால பாஸ்கர் குடும்பம் வந்த கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் குழந்தை தேஜஸ்வினி இறந்துவிட்டது. படுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி, அர்ஜுன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீஸ்
கார் டிரைவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் டிரைவர் அர்ஜுன் தூங்கியதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேடை நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன பாலபாஸ்கரின் குடும்பம் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தை
பாலபாஸ்கருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு தேஜஸ்வினி பிறந்தார். குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கிடந்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தேஜஸ்வினி 2 வயதிலேயே இறந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











