தெலுங்கு நடிகர் தாரகா ரத்னா மறைவு... பாலய்யா, ஜூனியர் NTR கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!
ஹைதராபாத்: பாலய்யா, ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் உறவினரான நடிகர் தாரகா ரத்னா மாரடைப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
22 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரகா ரத்னா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர் தாரகா ரத்னா உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

22 நாட்கள் போராட்டம்
மறைந்த நடிகரும், ஆந்திர முதலமைச்சருமான என்.டி.ராமராவின் பேரனான தாரகா ரத்னாவும் படங்களில் நடித்து வந்தார். ஏற்கனவே பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் என்.டி.ஆர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில், 'ஒகடோ எண் குராடு' படத்தில் ஹீரோவாக அறிமுகமான தாரகா ரத்னா, தெலுங்கில் முக்கியமான நடிகராக வலம் வந்தார். கடந்த மாதம் 27ம் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குப்பம் பகுதியில் நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட தாரகா ரத்னா மாரடைப்பு மயங்கி விழுந்தார்.

ரசிகர்கள் இறுதி அஞ்சலி
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் தாரகா ரத்னாவுக்கு வால்வுகளில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாரக ரத்னா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ள நிலையில், பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் வடித்த பாலய்யா
உயிரிழந்த தாரக ரத்னாவுக்கு அலேக்யா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தாரகா ரத்னா உயிரிழந்ததை அறிந்த அலேக்யா, இருதினங்களாக சாப்பிடாமல் மிகவும் பலவீனமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆடை வடிவமைப்பாளரான அலேக்யாவும் தாரகா ரத்னாவும் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தாரகா ரத்னாவின் உடலுக்கு அவரது மாமாவும் நடிகருமான பாலய்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தாரகாவின் உடலை பார்க்க முடியாமல் அவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல் தாரகா ரத்னாவின் குழந்தைகள் ஓடிப்போய் பாலகிருஷ்ணாவை கட்டியணைத்துக் கொண்ட வீடியோவும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

ஜூனியர் என்டிஆர் சோகம்
அதேபோல், முன்னணி நடிகரான ஜூனியர் NTR-ம், நேரில் சென்று தாரகா ரத்னாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தாரகா ரத்னா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் ஜூனியர் என்.டி.ஆர் நேரில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தாரகா ரத்னாவுக்கு ஜூனியர் என்.டி.ஆர் இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், என்.டி.ஆர் குடும்பத்தினரும் தாரகா ரத்னா மறைவால் கண்கலங்கி நின்றனர். இதனிடையே தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். தமிழில் நடிகர் மயில்சாமி உயிரிழந்ததால் கோலிவுட் திரை பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர். அதேநேரம் தாரகா ரத்னாவின் மறைவால் தெலுங்கு திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











