விஜய் ஒண்ணும் சும்மா அந்த படத்தை 5 முறை பார்க்கல.. உலகளவில் கவனத்தை ஈர்த்த பகவந்த் கேசரி சீன்.. செம!
சென்னை: நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தை தளபதி விஜய் 5 முறை பார்த்தார் என்றும் அந்த படம் தான் தளபதி 69 படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடிவி கணேஷ் சமீபத்தில் மேடையிலேயே அதை புட்டு புட்டு வைக்க அந்த படத்தின் இயக்குநரான அனில் ரவிப்புடி அவரை பேச விடாமல் தடுத்ததும் அதை உறுதி செய்வது போல அமைந்தது.
தெலுங்கு சினிமாக்களின் தீவிர ரசிகரான விஜய் பிரபாஸின் சலார் படத்தை தியேட்டரிலே முன் வரிசையில் அமர்ந்து பார்த்தார் என்கிற தகவல்கள் வெளியாகின. அதே போல மகேஷ் பாபுவின் சில பெரிய படங்களை ரீமேக் செய்து கில்லி, போக்கிரி என தமிழிலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் தான் விஜய்.

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை விஜய் ரீமேக் செய்து நடித்து வருகிறார் என்றும் பாலகிருஷ்ணா போல உடல் எடையை அதிகரித்து, கடா மீசை எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது நேற்று அவர் பரந்தூரில் வந்து விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக அவர் பேசியதை பார்த்தே ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யை கவர்ந்த பகவந்த் கேசரி படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி உலகளவில் பேசப்பட்டு மட்டுமல்ல சோதிக்கப்பட்டும் இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பகவந்த் கேசரி: அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியான படம் தான் பகவந்த் கேசரி. ஸ்ரீலீலாவை தனது மகளாகவே வளர்த்து வரும் பாலகிருஷ்ணா அவரை ராணுவத்தில் சேர்க்க போராடுவதும், அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காதல் வலையில் விழும் ஸ்ரீலீலாவுக்கு வில்லன் ஆட்களிடம் இருந்து வரும் பிரச்சனையை அத்தனை வழிகளையும் தடுக்கும் நாயகனாக மாஸ் காட்டியிருப்பார் பாலகிருஷ்ணா. 60 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 115 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்லட் ப்ரூஃப்பாக மேன் ஹோலை மாற்ற முடியுமா?: பாலகிருஷ்ணா படங்களில் பொதுவாக வரும் சண்டைக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் கிராவிட்டி, பிசிக்ஸ் மற்றும் லாஜிக் என எதுவுமே இருக்காது என பலரும் கிண்டல் செய்வார்கள். பகவந்த் கேசரி படத்திலும் ஏகப்பட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஒரு டன்னல் சண்டைக் காட்சி இருக்கும். அதில், பலரும் பெரிய ரக துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு சுட பாலகிருஷ்ணா அசால்ட்டாக மேன் ஹோலை கவசமாக பயன்படுத்தி தப்பிப்பார். இந்நிலையில், வெளிநாட்டில் சிலர் அந்தக் காட்சியை குறிப்பிட்டு, அப்படி செய்ய முடியுமா என சோதித்து பார்க்கும் காட்சிகளும், மேன் ஹோல் மூடியை வைத்து பல உயர் ரக துப்பாக்கி குண்டுகளை தடுக்க முடிவதையும் சோதித்து பார்த்துள்ள வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தளபதி 69 எப்படி இருக்குமோ?: இதுவரை அதிகாரப்பூர்வமாக தளபதி 69 படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை என்று சொல்லப்பட்டாலும், மமிதா பைஜுவின் கதாபாத்திரம் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் தான் என்றும் விடிவி கணேஷ் மேடையில் வைத்து பேசியதை வைத்தும் அந்த படத்தை தான் ரீமேக் செய்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். விஜய்யின் கடைசி படம் எப்படி இருந்தாலும் நிச்சயம் ரசிகர்கள் அதை பெரிய ஹிட் ஆக்கிடுவாங்க என்றும் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக ட்ரீட் உறுதி என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











