பாலாவின் வணங்கான்.. வந்தது விடிவுகாலம்?.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. சொன்னபடி நடக்குமா?
சென்னை: அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. முதலில் இந்தப் படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா. ஆனால் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகினார். வணங்கான் படம் பாலாவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த சூழலில்; எப்போது படம் ரிலீஸாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவந்தார். அவரது சில படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்படுபவை. முக்கியமாக இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் பாலா. ஆனால் இடையில் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும் அவரது கடைசி ஹிட் படம் அமைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

குடும்ப பிரச்னை: கடைசியாக அவர் விக்ரம் மகனை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தால் பாலாவுக்கு சிக்கலும் ஏற்பட்டது. அதாவது பாலா எடுத்த வெர்ஷன் விக்ரமுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் பிடிக்காமல் போக வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்று அந்தப் படத்தை எடுத்தார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது மனைவி மலரையும் விவாகரத்து செய்தார் பாலா. இதன் காரணமாக அவருக்கு சுற்றி எங்கிலும் நெருக்கடி ஏற்பட்டது.
வணங்கான்: வர்மாவில் ஏற்பட்ட அவமானத்தை போக்கிட சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார் பாலா. ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரணால் சூர்யா படத்திலிருந்து விலகினர். இது பாலாவுக்கு மேலும் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. எப்படியாவது தன்னை மீண்டும் நிரூபித்துவிடும் முனைப்பில் இருந்த அவர் வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்தார்.
முடிந்த ஷூட்டிங்:. இதில் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து பழைய பாலாவாக மீண்டு வருவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி டீசண்ட்டான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
படம் தரமா இருக்காம்: படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட சூழலில்; பாலாவுக்கு நெருக்கமானவர்கள் சமீபத்தில் படத்தை பார்த்து மெர்சல் ஆகிவிட்டதாக கோலிவுட்டினர் கூறுகிறார்கள். முக்கியமாக பாலாவின் மேக்கிங் இதில் தரமாக இருக்கிறது என்றும்; இந்தப் படத்தை ஏன் மிஸ் செய்தோம் என்று சூர்யா ஃபீல் செய்யும் அளவுக்கு படம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எப்போது ரிலீஸ்: படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டாலும் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இதற்கிடையே முதலில் ஆகஸ்ட் மாதம், பிறகு தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று வணங்கான் பற்றி தகவல்கள் வெளியாகி அது நடக்கவில்லை. எனவே இந்த முறையாவது வெளியான தகவல்படி பொங்கலுக்கு படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











