இந்த வயசுல ஒரு பொண்ணு கேட்குதா? தப்பா பேசினார்கள்.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் கண்ணீர் பேட்டி!
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. இவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை என்ற அனைத்து படங்களும் காலத்தால் அழியாத படங்களாக உள்ளன. சினிமாவில் உச்சத்தில் ஜொலித்த பாலு மகேந்திராவை சுற்றி பல சர்ச்சைகளும் வலம் வந்தன. தற்போது அவரின் வளர்ப்பு மகள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் உறவினர்கள் ஒருவர் மூலம் எனக்கு பாலு மகேந்திரா அவரின் அறிமுகம் கிடைத்தது. நான் அவரை சந்திக்கும்போது, அவர் இவ்வளவு பெரிய லெஜெண்ட் என்று எனக்கு தெரியாது. அப்போது, எனக்கு 11 வயது தான், இன்ஸ்டிடியூட்டில் அவரை பார்த்த போதே, என்னை மகளே என்று தான் பாசமாக அழைத்தார். அதன் பின் போட்டோ எடுத்துக்கொண்டு வாய்ப்பு வந்தால், சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.

பாலு மகேந்திரா வளர்ப்பு மகள்: இதையடுத்து, இரண்டு நாள் கழித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அப்போது நானும் அம்மாவும் சென்றோம். அப்போது அவர் என் அம்மாவிடம், இந்தப் பெண்ணை நான் என் மகள் போல தத்து எடுத்து பார்த்துக் கொள்கிறேன் என்றார். அது, என் அம்மாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் அப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால் பாலு மகேந்திரா அவர்களின் அம்மா இறந்த தேதியும், நான் பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததால் அவர் எமோஷனல் ஆகவே என்னிடம் கனெக்ட் ஆகிவிட்டார். இதற்கு அம்மாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். அதற்கு காரணம் எனக்கு அப்பா இல்லாததால்,அந்த வயதில் எனக்கு அப்பாவின் பாசம் தேவைப்பட்டது.
தப்பா பேசினார்கள்: பலருக்கும் நான் அவரின் வளர்ப்பு மகள் என்றே தெரியாது. இந்த வயதில் பாலு மகேந்திரா ஒரு பெண்ணை வளர்க்கிறார் என்றால் அனைவரும் தப்பாகத்தான் பார்த்தார்கள். குடும்பத்தினரும் இதே தப்பாகத் தான் பார்த்தார்கள். ஆனால் எனக்கும் அவருக்கும் மட்டும்தான் எங்களின் உறவு என்ன என்பது தெரியும், இதனால் எங்களின் உறவுமுறை குறித்து நாங்கள் யாரிடமும் சொல்லியதே இல்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. அவர் பல முறை, உனக்கு ஏதாவது சினிமாவில் சான்ஸ் வேண்டும் என்றால் கூட, என்னுடைய பெயரை பயன்படுத்திவிடாதே, அதனால் உனக்கு நல்லதும் நடக்கலாம், கெட்டதும் நடக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால், இதுநாள் வரை நான் அவருடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தியது இல்லை.
உடலை பார்க்கவிடல: நான் அப்பாவுடன் ஐந்து ஆண்டு காலம் இருந்து இருக்கிறேன். எப்போதுமே அவர், முறைப்படியாக உன்னை மகள் என்று அறிவிக்க முடியாது. ஆனால் நீ என் மகள் தான் என்று எப்பொழுதுமே சொல்வார். மற்றவர்கள் தவறாக பேசுவார்கள், அதை பற்றி நீ கவலைப்படாதே என்று சொல்லுவார். அவர் உயிரோடு இருக்கும் போது, எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், அவர் இறந்தபோது அவரை என்னால் சென்று பார்க்கக்கூட முடியவில்லை. மற்றவர்களின் பார்வையில் எங்களின் உறவு தப்பாக இருந்ததால் யாரும் என்னை வரக்கூடாது என்று தடுத்து விட்டார்கள். அதையும் மீறி நான் அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்டேன். அவரை யார் என்றே தெரியாதவர்களே அந்த இடத்தில் மணிக்கணக்கில் நின்ற போது, என்னை மட்டும் வரக்கூடாது என்று சொன்னார்கள், அந்த வலி இப்போதும் இருக்கிறது என்று அந்த பேட்டியில் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











