Goundamani: 20 வயது வித்தியாசம்.. 40 வருடம் ரகசியத்தை காத்த கவுண்டமணி.. பயில்வான் சொன்ன தகவல்!
சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, நேற்று உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் சத்யராஜ், செந்தில், விஜய் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 11 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெற்றது. கவுண்டமணி தனது மனைவிக்காக சடங்குகளை செய்தார். இதைத்தொடர்ந்து சாந்தியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்னை பெசண்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
கவுண்டமணியின் மனைவி சாந்தியின் மறைவு குறித்து, யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். கவுண்டமணிக்கு எத்தனை குழந்தைகள், அவருடைய மனைவி யார் என்பது யாருக்குமே தெரியாது. சினிமாவில் ஆர்வமாக இருக்கும் ஒரு சில பேருக்குத்தான் கவுண்டமணி குடும்பம் குறித்து தெரியும். கவுண்டமணியின் மூத்த மகள் சுமித்ராவிற்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு கூட, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் கலந்து கொண்டார்கள். தற்போது, சுமித்ரா, சென்னையில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனைக்கு மாதந்தோறும் வந்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வருகிறது.

பயில்வான் ரங்கநாதன்: நடிகர் கவுண்டமணியும் தனது குடும்பத்தை பற்றிய எந்த தகவலையும், புகைப்படங்களையும் வெளியிட்டதே இல்லை. குடும்பத்தை பற்றி ஏதாவது கேட்டால், என் குடும்பத்தை பற்றிய தெரிந்து கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன ஆர்வம் என்று கேட்பார். என்னுடைய மனைவி மகள்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பதில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். திரைப்பிரபலங்களின் திருமணம், வீட்டு விசேஷம் என எதுவாக இருந்தாலும், தனியாகத்தான் செல்வார். அதேபோல, எல்லா விசேஷத்திற்கும் சென்றுவிட மாட்டார். ரொம்ப முக்கியமான விசேஷமாக இருந்தால் மட்டுமே செல்வார். அவருக்கு கடவுள் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை, இதனால், எந்த கோவிலுக்கும் செல்ல மாட்டார்.
20 வயது வித்தியாசம்: கவுண்டமணியின் மனைவி சாந்தி, அந்த காலத்தில் நாடகத்தில் நடித்து இருக்கிறார். அதே போல, ஒரு சில படத்திலும் அவர் துணை நடிகையாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாந்திக்கும் கவுண்டமணிக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கவுண்டமணிக்கு சுமித்ரா, செல்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், சுமித்ராவிற்கு மட்டும் கொஞ்சம் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒன்று இரண்டு போட்டோத்தான் இணையத்தில் உள்ளது. மற்றபடி, கவுண்டமணி குடும்பத்தின் எந்த போட்டோவும் இல்லை, சாந்தி, 3 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் தான் இருந்து உள்ளார். இதையடுத்து, நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











