Laal salaam : லால் சலாம் அடுத்த பாட்ஷாவா.. கதையை கேட்டு மிரண்டுவிட்டேன்.. பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் சிறப்பு தோற்றம் குறித்த போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
லால் சலாம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நெருப்பு கக்கும் கலவர பூமியில் வீர நடை போட்டு வருபவராக, சாந்தியும் சமாதனாமும் உண்டாவதாக' என்ற கேப்ஷனுடன் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மற்றொரு பாட்ஷாவா : இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், லால் சலாம் படத்தின் போஸ்டரைப்பார்த்து இப்படம் மற்றொரு பாட்ஷாவா என்ற பேச்சு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் இஸ்லாமியராக நடிக்கவில்லை என்றாலும், அந்த படத்தில் தனது பெயரை பாட்ஷா என்று வைத்துக்கொண்டார்.
மொய்தீன் பாய் : தற்போது ரஜினிகாந்த் தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் கிரிக்கெட் வீரர்களாக நடிக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்க முடிவு செய்து லைகா நிறுவனத்தை அணுகியபோது, எங்கள் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க வேண்டும் என்றால், இதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று லைகா கண்டிஷன் போட்டதால், தனது மகளுக்காக ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி நடிப்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் தானாக முன்வந்து இப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.
இஸ்லாமியராக : நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த், ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால், சமீபகாலமாக ரஜினி,பாஜகவில் சேரப்போகிறார்,பாஜகவின் விஸ்வாசி என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டுவந்ததை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டரைப்பார்த்து ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருக்கின்றனர்.

மதநல்லிணக்கம் : ரஜினி தனது ரசிகர்களை தேசபற்றாளர்களாக, மதம்,இனம் சாதி இல்லாதவர்களாக மாற்றும் விதத்தில் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகவும், இதுவரை தனது படங்களில் சொல்லாத விஷயத்தை, இப்படத்தில் ரஜினிகாந்த் சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், சொல்லும் சில வார்த்தைகளை சிலர் வேதமாக பார்க்கின்றனர். எனவே மத ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமாக லால் சலாம் படம் நிச்சயம் இருக்கும் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











