Beast Box Office Day 1: வலிமை வசூலை முறியடித்த பீஸ்ட்.. முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை உலகளவில் நிகழ்த்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அமோகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறுகின்றனர்.

விமர்சனம் எப்படி இருந்தாலும்
ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் எப்படி இருந்தாலும், முதல் நாளில் அபார வசூல் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வெள்ளிக்கிழமை ரிலீஸ் வியாழக்கிழமையாக முன்னேறிய நிலை மாறி புதன்கிழமையே வெளியான பீஸ்ட் திரைப்படம் புதன் முதல் ஞாயிறு வரை அதிகப்படியான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் அந்த படத்தில் நடித்த நடிகர்களின் ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. ஆனால், விஜய் நடித்துள்ள பீஸ்ட் விமர்சகர்கள் மற்றும் பொது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 850க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 36 முதல் 37 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு பீஸ்ட் திரைப்படம் தான் அதிக வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்கின்றனர்.

இந்தியளவில்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு தமிழ்நாட்டை போலவே ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் மிகப்பெரிய ஓப்பனிங் முதல் நாளில் இருந்தது. பீஸ்ட் திரைப்படம் மற்ற மாநிலங்களில் 15 முதல் 20 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்றும் இந்தியா முழுவதும் 55 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை பீஸ்ட் முதல் நாளில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

70 கோடி
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக விரைவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமையை முந்திய பீஸ்ட்
அஜித்தின் வலிமை திரைப்படம் தான் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ்ப் படமாக இருந்தது. இந்நிலையில், வலிமை படத்தை விஜய்யின் பீஸ்ட் வசூல் ரீதியாக முதல் நாளில் முந்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் சிஓஓ செம்பியன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

வசூல் தொடருமா
முதல் நாளை போலவே முதல் வாரத்திலும் பீஸ்ட் படத்தின் வசூலுக்கு பெரிய பிரச்சனை இருக்காது என்றும், ஆனால், கேஜிஎஃப் 2 படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ்வான விமர்சனங்கள் காரணமாக பீஸ்ட் படத்திற்கு பதிலாக கேஜிஎஃப் 2 படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டால் நிச்சயம் பீஸ்ட் வசூல் பெரிய அடி வாங்கும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











