Beast Trailer Review: மணி ஹெய்ஸ்ட் பாதிப்பா.. கூர்கா காப்பியா.. வீரராகவனின் வேட்டை எப்படி இருக்கு?
சென்னை: ஷாப்பிங் மால் ஹைஜாக் தான் பீஸ்ட் படத்தின் கதை என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், பீஸ்ட் படத்தின் டிரைலரில் அந்த விஷயங்கள் அப்படியே நிறைந்து காணப்படுகின்றன.
மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸில் விஜய் புரொபஸராக நடித்தால் நல்லா இருக்கும் என அதன் இயக்குநர் அளித்த பேட்டியை பார்த்து விட்டு இயக்குநர் நெல்சன் இப்படியொரு கதையை விஜய்க்காக உருவாக்கினாரா என தெரியவில்லை.
அந்த புரொபஸர் ஹைஜேக்கிற்கு மாஸ்டர் பிரைனாக இல்லாமல், ஹைஜேக் பண்ண வந்தவர்களை மர்டர் பண்ணினால் அதுதான் பீஸ்ட் படத்தின் கதை என்பதை டிரைலரிலேயே போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

ஷாப்பிங் மால் ஹைஜாக்
சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கிறிஸ்துமஸ் உடையணிந்து கொண்டு கொள்ளையர்கள் சிலர் அந்த மால்-ஐ ஹைஜாக் செய்கின்றனர். இந்த விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியாக செல்வராகவன் என்ட்ரி கொடுக்கிறார் (வில்லன் இல்லை). மாலுக்குள் நம்ம பையன் ஒருத்தன் இருக்கான் வீரராகவன் என செல்வராகவன் இன்ட்ரோ கொடுக்க விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார்.

வீரராகவனாக விஜய்
ஸ்பை ஏஜென்ட்டாக இந்த படத்தில் விஜய் நடித்துள்ளார். ஜெட் ஃபிளைட்டை ஹெல்மெட் போடாமல் ஓட்டுவது, பயங்கரவாதிகளை பயங்கரமாக கொல்வது என விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயம் பீஸ்ட் படத்தில் மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று தான் தெரிகிறது. கமலின் விஸ்வரூபம் படத்தை பார்த்தது போல சில காட்சிகள் டிரைலரில் மிரட்டி எடுத்தது.

மணி ஹெய்ஸ்ட் பாதிப்பா
உலகளவில் பிரபலமான நெட்பிளிக்ஸின் மணி ஹெய்ஸ்ட்டில் பேங்க் ஒன்றை ஹைஜேக் செய்து விடுவார்கள். அவர்களை போல இங்கேயும் கோமாளி மாஸ்க்கிற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க்கை அணிந்து ஹைஜாக் செய்கின்றனர். ஆனால், மாலுக்குள் ஒரு அதி பயங்கரமான ராணுவ வீரர் இருந்தால் அங்கே பிணைக் கைதிகளாக இருப்பவர்களை எப்படி மீட்பார் என்கிற கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் நெல்சன்.

கூர்கா படமா
ஏற்கனவே பீஸ்ட் படத்தின் கதை ஷாப்பிங் மால் ஹைஜாக் என்றதுமே ஹாலிவுட் படம் மற்றும் தமிழில் வெளியான யோகி பாபுவின் கூர்கா படத்தின் கதையின் காப்பி தானா? என ட்ரோல்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது டிரைலரை பார்த்த பின்னர் இது தான் கதை என்பது தெரிந்ததும் அஜித் ரசிகர்கள் கூர்கா படத்தின் காப்பி பீஸ்ட் என கலாய்த்து வருகிறார்கள்.

கேஜிஎஃப்புக்கு ஈடு கொடுக்குமா
கூர்கா படத்தில் இல்லாத அளவுக்கு பீஸ்ட் படத்தில் விஜய் ஆக்ஷனில் மிரட்டி எடுத்திருக்கிறார் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால், படத்தின் ப்ளாட் ஏற்கனவே பல இடங்களில் பார்த்த நிலையில், கேஜிஎஃப் படத்துக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு பீஸ்ட் இருக்குமா? என்பது சந்தேகம் தான்.

காமெடி எங்க பாஸ்
இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படமும் டார்க் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டிரைலரில் ஒரே ஒரு இடத்தில் யோகி பாபுவுடன் விஜய் பேசும் வசனம் மட்டுமே சிரிக்க வைக்கிறது. ரத்தம் தெறிக்க தெறிக்க கொள்ளையர்களை விஜய் அத்தனை பேருக்கும் முன் கொல்கிறாரா? இல்லை இதெல்லாம் ஒரு கனவா? படம் டோட்டலாக ஆக்ஷனாக இல்லாமல் வேற மாதிரி செல்லுமா? என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

அடிவாங்கும் சிஜி
ஃபைட்டர் ஜெட் விமானங்களை எல்லாம் விஜய் ஓட்டும் காட்சிகள் ரொம்பவே சிரிப்பை வரவழைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது. சிஜி ரொம்பவே அந்த காட்சிகளில் அடி வாங்கி இருப்பது தெரிகிறது. படத்தில் இதெல்லாம் ஆரம்ப காட்சிகளாக கடந்து விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வசனங்கள்
"இருந்தாலும் நீங்க பண்ற இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது" மற்றும் "ஐ எம் நாட் எ பொலிடிஷியன்.. ஐ எம் எ சோல்ஜர்" என விஜய் சொல்லும் அரசியல் வசனங்கள் எல்லாம் தெறிக்கிறது. வெறும் டிரைலரை வைத்தே எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. முழு படத்தையும் பார்த்தால் தான் வொர்த்தா இல்லையா? என்பதை சொல்ல முடியும். இருந்தாலும், விஜய்க்கு நெல்சன் வேறு கதை பண்ணியிருக்கலாம்!


Click it and Unblock the Notifications











