மூளையில் ரத்தக்கசிவு..அவசர அறுவை சிகிச்சை..நினைவு திரும்பாமலே உயிரிழந்த நடிகை!
கொல்கத்தா : உயிருக்கு ஆபத்தான நிலையில் கோமா நிலையில் இருந்த சீரியல் நடிகை நேற்றிரவு உயிரிழந்தார்.
மேற்கு வங்க நடிகையான அந்த்ரிலா ஷர்மா, 'ஜுமுர்'என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரையில் அறிமுகமானார். பெங்காலி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான முகங்களில் அந்த்ரிலாவும் ஒருவர்.
இவர் ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி மற்றும் பிற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகை அந்த்ரிலா ஷர்மா
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தார். நவம்பர் 1ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ரத்தக்கசிவு
மருத்துவனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு மூளையின் இடது பக்கம் ரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர், தொற்று நோய் நிபுணர், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மற்றும் புற்று நோய் கதிர்வீச்சு நிபுணர் ஆகியோர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர்.

நேற்றிரவு உயிரிழந்தார்
மருத்துவர்கள் அந்த்ரிலாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த நிலையில் நினைவு திரும்பாமலே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அந்த்ரிலா ஷர்மாவின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஆழ்ந்த இரங்கல்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த்ரிலா ஷர்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த அந்த்ரிலா சர்மா என்றென்றும் அனைவர் மனதிலும் நிலைத்து இருப்பார். அவருக்கு நிறைய கனவுகளும், கடமைகளும் இருந்தன. இளம் நடிகையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கண்ணீர் வடித்த தோழி
நடிகை அந்த்ரிலாவின் நெருங்கிய தோழியான அலிவியா சர்க்கார், அந்த்ரிலா போராட்ட குணம் கொண்டவள் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டு இருக்கிறார். இந்த முறையும் மீண்டு விடுவாள் என்று இறைவனை பிரார்த்தனை செய்தேன். ஆனால், அந்த்ரிலாவின் இறப்பு செய்தி வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீர் வடித்து கதறி அழுது வருகிறார்.


Click it and Unblock the Notifications











