தேசிய விருது பெற்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி!

கொல்கத்தா அருகே உள்ள கோபிவல்லபபூர் எனும் இடத்தில் தேவஸ்ரீராயும் அவரது குழுவினரும் கலைநிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த வழிப்பறி நடந்தது. மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் நேதுரா என்ற இடத்தில் சாலையில் மரங்கள் விழுந்து கிடந்ததால் தேவஸ்ரீ சென்ற கார் அங்கே நின்றது.
அப்போது இருட்டில் மறைந்திருந்த கொள்ளைக்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரைச் சூழ்ந்துகொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். கத்தியால் டிரைவரை வெட்டியுள்ளனர். காரில் இருந்தவர்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருளில் ஓடி மறைந்தனர்.
காயத்துடன் டிரைவர் அந்தக் காரை கோபிவல்லபபூர் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு கொண்டு சென்றார். போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இரவு முழுவதும் தேவஸ்ரீ ராயும் சக கலைஞர்களும் போலீஸார் பாதுகாப்பில் இருந்துள்ளனர். விடிந்ததும் கொல்கத்தா சென்றனர்.
1996-ம் ஆண்டு 'உன்னீஸ் ஏப்ரல்' (19 ஏப்ரல்) என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் தேவஸ்ரீ ராய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











