ரன்வீர் சிங் மீது வழக்கு.. அதிர்ச்சியில் பாலிவுட்.. கைது செய்யுங்க என எழும் கோரிக்கை.. என்ன ஆச்சு?
பெங்களூரு: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மொத்த பாலிவுட்டையும் குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கி உள்ளது. குறிப்பாக அதற்கான காரணம் மிகவும் சென்சிடிவானதாக உள்ளது. கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ரன்வீர் சிங் இறுதி நாளை தொகுத்து வழங்கி வந்தார். அப்போது அவர் காந்தாரா படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி குறித்து பேசும்போது, காந்தாரா படம் குறித்தும், அதில் கடவுள் எழுப்பும் ஒளி குறித்தும் பேசினார். அவரது பேச்சில் கிண்டலும் கேலியும் இருந்தது. இதற்கு இணையவாசிகள் பலரும் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது " நடிகர் ரன்வீர் சிங் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 196, 299, 302 ன் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நிறைவு விழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து அந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவமதிப்பு?: 'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவரது அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் நான் இப்படி எல்லாம் கத்தவேண்டும் என்று ரன்வீர் சிங் புனிதமான தெய்வ மரபை அவமதிக்கும், கேலி செய்யும் செயல்களில் ஈடுபட்டதாக FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு தெய்வத்தை 'பேய்' என வர்ணித்ததால், இது இந்து மத நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும் பெரும் அவமானமான தெய்வ நிந்தனை எனப் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய செயல் வேண்டுமென்றே மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கம் கொண்டது எனவும்" புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு: அவரது இந்த செயல் இந்து பக்தர்களை புண்படுத்தியதுடன், சமூகத்தில் மத குழுக்களிடையே பகை, வெறுப்பு, ஒற்றுமையின்மையை உருவாக்கும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாவண்டி தெய்வ நம்பிக்கைகளை அவமதித்து, புனித பாரம்பரியத்தை இழிவுபடுத்தி, வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது" இதனால் கர்நாடக காவல்துறை அவர் மீது 196, 299, 302 என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜாமீன் பெற முடியும் என்பதால் அவரை கைது செய்து விசாரணை காவலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும் புகார்தாரர் தரப்பில் ரன்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் தற்போது மொத்த பாலிவுட்டையும் கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











