Top 5 Comedians: 2023ல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த டாப் 5 காமெடியன்கள்.. இது வேற லெவல் பட்டியல்!
சென்னை: மற்ற திரைத்துறைகளை போலவே தமிழ் படங்களிலும் நகைச்சுவை நடிகர்களுக்கென தனி சிறப்பு உண்டு. ஒரு நல்ல மசாலா படத்தில் சண்டை காட்சி, சேஸிங் காட்சி, பாடல்கள், காமெடி காட்சிகள் முக்கியத்துவம் வகிக்கின்றன.
தமிழ் படங்களில் பெரும்பாலும் காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதற்காகவே நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தேவை இருந்துக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு காமெடி காட்சிகளில் கலக்கிய டாப் 5 நடிகர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜெயிலர் தன்ராஜ்: ஜெயிலர் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தன்ராஜ் நெல்சனின் ஜிம் மாஸ்டராக இருந்துள்ளார். நெல்சனுடன் 12 ஆண்டுகள் பழக்கத்தில் இருந்த தன்ராஜுக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் தன்ராஜின் காமேடி சீன்கள் ரசிக்கும்படியாக இருந்தது. 2023-ம் ஆண்டு சிறந்த காமெடியன்கள் பட்டியலில் தன்ராஜ் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதிலும் அந்த கார் சீட் காமெடி வேறலெவல்.
வடிவேலு: சில ஆண்டுகள் திரைத்துறையில் தலைக்காட்டாவிட்டாலும் எப்போதும் டிரெண்டிங்கிலேயே இருப்பவர் வைகைபுயல் வடிவேலு. பல படங்களில் காமேடியனாகவும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2023-இல் இவர் நடிப்பில் மாமன்னன், நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி-2 போன்ற படங்கள் வெளியாகின. இந்த வருடத்திற்கான நகைச்சுவை நடிகர்கள் டாப் 5 பட்டியலில் வடிவேலு 4வது இடத்தை பிடித்துள்ளார். மாமன்னன் படத்திலும் ரசிகர்களை அழவும் வைத்து விட்டார் வடிவேலு.
எஸ்.ஜே.சூர்யா: இயக்குநராக அறிமுகமாகி கதாநாயகனாக வளம் வந்து தற்போது எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதனோடு ஒன்றி, எந்த படத்தில் அவர் நடித்தாலும் அந்த படத்தின் விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மாஸ் என்று சொல்லும் அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக இருந்தாலும் நகைச்சுவைக்கு குறைவின்றி படம் முழுக்கு சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார். இந்த ஆண்டுக்கான பெஸ்ட் காமேடியன்களில் 3வது இடத்தை பிடித்துள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. கேங்ஸ்டருக்கு டிசிப்ளீன் முக்கியம் என்று சொல்வதில் இருந்து, பொம்பள சோக்கு கேட்குதா எனக்கூறும் காட்சிகளில் சிரிப்பு பட்டாசு வெடிக்கிறது. அதிலும், சில்க் ஸ்மிதாவை பார்த்த பின்னர் அவன் கெடக்குறான்.. என சொல்லி விட்டு ஒரு ஆட்டம் போடுவாரே மொத்த தியேட்டரும் விழுந்து விழுந்து சிரித்தது.
சந்தானம்: லொள்ளு சபாவில் தனது பயணத்தை தொடங்கி தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்த சிறப்பை பெற்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் காமேடியனாக நடிக்க மாட்டேன் என சொன்ன சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே நடித்து வந்தார். இந்த ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் 2, கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கி 2வது இடம் பிடித்துள்ளார்.
யோகி பாபு: பல ஆண்டுகளாக நடிகராக போராடி, சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இந்த வருடத்தில் ஜவான், மாவீரன், ஜெயிலர் போன்ற படங்களில் காமெடியில் கலக்கி ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். ஹீரோவாகவும், காமெடியனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். மாவீரன் படத்தில் பேட்ச் வொர்க் பண்ணியே ரசிகர்களை சிரிக்க வைத்து நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











