பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்.. எல்லை மீறும் நெட்டிசன்ஸ்
சென்னை: இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு பிறகு அவரது பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மட்டுமல்லாமல், அது வெளியிடப்பட்ட விதமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி வருகின்றன.
பாக்யராஜின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "எஞ்சுவது கொஞ்சமாயினும், மிஞ்சியது அன்பே ஆஸ்தியாகும்" என்ற வரிகளுடன் தனது இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனது மகன் சாந்தனுவின் புதிய திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும், "என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, "நான் வாழ்ந்த வாழ்க்கையை விட என் மகன் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்" என்ற உணர்வுபூர்வமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், "நன்றி சொல்வது மனித இயல்பு. நன்றிதான் அடையும் தாண்டி வந்து விட்டதே. இனி நான் நல்ல சினிமாவிலும், நல்ல திறமையாளர்களிலும், நல்ல வசனத்திலும், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்" என்ற வரிகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதும், பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பாக்யராஜின் பெயரில் அவரது மறைவுக்கு பிறகு இப்படியான அறிக்கையை வெளியிட்டு, ஒரு திரைப்படத்திற்கு ஆதரவு கோருவது சரியான நடைமுறையா என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த அறிக்கையில் அவரது மனைவி மற்றும் மகள் குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், மகனை மட்டுமே முன்னிறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மறைந்த ஒருவரின் பெயரில் அவரது விருப்பம் போல அறிக்கை வெளியிடப்பட்டதா அல்லது வேறு யாராவது தயாரித்ததா என்ற சந்தேகங்களையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைதள பதிவின் மூலம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த அறிக்கையை சாந்தனு வெளியிடவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அவரை தொடர்புபடுத்தி தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம் அறிக்கையின் உள்ளடக்கத்தை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மறுபுறம் சம்பந்தப்பட்ட நபரை குற்றம்சாட்டாமல் உண்மை வெளிவர காத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. இதனால், பாக்யராஜ் பெயரில் வெளியான இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications