சினிமாவில் 50 வருடங்களை கடந்த பாக்கியராஜ்.. அடுத்த படத்தை இயக்கப் போவதாக மாஸ் அறிவிப்பு!
சென்னை: திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கே. பாக்யராஜ், தனது 50 வருட கலைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையிலும், தனது பிறந்தநாளை முன்னிட்டும் அவர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமண்ட் பாபு, சிங்காரவேல், மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பாக்யராஜ் வந்திருந்த அனைத்துப் பத்திரிகையாளர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சந்திப்பில் பேசிய கே. பாக்யராஜ், "அனைத்துப் பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் ஐம்பது ஆண்டுகள்கூட ஆகிவிட்டதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. எனது நண்பர்கள், தாய் என அனைவரும் எனக்குள் நம்பிக்கை வைத்து, நான் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறினார்கள்" எனக் குறிப்பிட்டார்.

'16 வயதினிலே' திரைப்படத்தில் முதன்முதலில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்ததை நினைவுகூர்ந்த அவர், "சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் கூட, இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் பெரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதுவரை எந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் இப்படி நடந்ததில்லை" என்று கூறியதை சுட்டிக்காட்டினார். வாய்ப்பு தேடிய ஆரம்பக்காலத்தில், தனது உண்மையான பெயரைச் சொல்லாமல், "கோவை ராஜா" என்று பெருமிதத்துடன் கூறியதாகவும் தெரிவித்தார்.
'16 வயதினிலே' படத்தில் பணிபுரியும் போதுதான் தனது பெயரை "பாக்யராஜ்" என மாற்றிக்கொண்டதாகக் கூறினார். அது தனது அம்மா தனக்குச் சூட்டிய பெயர் என்றும், டைட்டில் கார்டில் அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு, "யார் இந்தப் பெயர்?" என தனது இயக்குநர் கேட்ட போது, "அது நம் ராஜன் தான்" என்று அனைவரும் கூறியதாகத் தெரிவித்தார். அம்மாவின் பாக்கியத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக "கே. பாக்யராஜ்" என்ற பெயரைத் தனக்கு நிலைப்படுத்திக் கொண்டதாக அவர் விளக்கினார்.
துணை இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்தே பத்திரிகையாளர்கள் தன்னைப் பற்றி எழுதி ஆதரவளித்ததாக அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் போது, தனது இயக்குநர் "எனக்குப் பிறகு ராஜன் தான்" என்று கூறியதாகவும், துணை இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்னர் நடிகர் என படிப்படியாக வளர்ந்ததாகவும் அவர் எடுத்துரைத்தார்.

'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக ஒரு கழுதையைத் தான் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அந்தக் காட்சிகள் போஸ்டர்களில் இடம்பெற்ற போது, தனது குடும்பத்தினர் "கழுதை ஓட்டவா சினிமாவுக்குச் சென்றாய்?" என்று கேலி செய்ததாகவும் வேடிக்கையாகப் பகிர்ந்தார். அப்போது தனது தாயார், "உன் இயக்குநரே உன்னை வைத்து எதிர்காலத்தில் ஹீரோவாக படம் எடுப்பார்" என்று கூறியதாகவும், அது உண்மை ஆகியபோதும், அத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவரது தாயார் காலமானது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
முதல் படத்தில் ஹீரோவாக நடித்தாலும், இரண்டாவது படமான 'கன்னிப் பருவத்தில்' வில்லனாக நடித்ததாக பாக்யராஜ் கூறினார். பின்னர் இயக்குநராக அறிமுகமானதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சினிமாவுக்கு வரும் முன், அதைப் பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததாகவும், மற்றபடி சினிமா பற்றி எதுவும் தெரியாது என்றும், இங்குள்ள இயக்குநர்களின் படங்களை பார்த்துதான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் புத்தகங்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
தனது சிறு வயது சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார். பள்ளி முடித்து வந்ததும், தனது தாயார் தேன் மிட்டாய் வாங்கக் காசு கொடுப்பார். ஒருநாள் தாயார் இல்லாத போது, பெட்டியை திறந்து காசு என நினைத்து, தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டார். ஆனால் அன்று மாலைதான், அவர் கொடுத்தது காசு இல்லை, தங்க மோதிரம் என்பது தெரிய வந்தது. கடைக்காரர் நினைத்திருந்தால் மோதிரத்தை எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் அவர் அதைத் தனது தாயாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். இச்சம்பவம் தான் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை அவருக்குச் சிறு வயதிலேயே உணர்த்தியதாகக் கூறினார்.
தனது ஆசிரியர்கள் இன்றும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களுக்குச் செய்த நல்லதை பார்த்து, அவரது குணாதிசயங்கள் தன் மனதில் ஆழமாகப் பதிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிவாஜி அவர்கள் எவ்வளவு புதிய இயக்குநராக இருந்தாலும் முழு மரியாதையை வழங்குவார் என்றார். கமல் ஹாசனின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், ரஜினிகாந்த்தை '16 வயதினிலே' படத்தில் பார்த்தது போலவே இன்றும் இருப்பதாகவும் அவர் சிலாகித்தார்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததாக நன்றியுடன் தெரிவித்தார். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்றும் தனக்கு ஆச்சரியமாகவே இருப்பதாகக் கூறிய அவர், அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு திரைப்படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறிப் பேச்சை முடித்தார்.


Click it and Unblock the Notifications











