Bhagyaraj Net Worth: 72 வயதாகும் பாக்யராஜ்.. இப்படியொரு ஆளுமை எல்லாம் சான்ஸே இல்லை.. சொத்து மதிப்பு!
சென்னை: பல கோடி ரூபாய் கொடுத்தும் படம் எடுக்கத் தெரியாமல் பல பிரம்மாண்ட இயக்குநர்கள் திணறி வருகின்றனர். ஆனால், அந்த காலத்தில் ஒரு ஹார்மோனிய பெட்டியை வைத்துக் கொண்டு ”நான் வாத்து” என்றும் பாடியும்.. முருங்கைக்காயை வைத்துக் கொண்டும் எவர்க்ரீன் காமெடி காட்சிகளை உருவாக்கி சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் ஹீரோவாகவும் இன்னமும் பெண்களின் ஃபேவரைட் பாக்கியராஜாகவும் அசத்தி வரும் நம்ம ஆளுக்கு இன்று 72 வயதாகிறது.
பாரதிராஜா பட்டறையில் இருந்து வெளியே வந்த பவள முத்து போல பாக்கியராஜ் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷமாகவே மாறியுள்ளார். எழுத்து, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்து இடங்களிலும் ஆல் ரவுண்டராக சிக்ஸர் அடித்த பாக்கியராஜின் நடனத்துக்கும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தனது மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாக்கியராஜ். தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் தூள் கிளப்பியிருந்தார். மகள் சரண்யாவும் பாரிஜாதம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை. நடிகர் பாக்கியராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம் வாங்க..
பாக்கியராஜ் பிறந்தநாள்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளன்கோயில் எனும் கிராமத்தில் 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் தான் பாக்கியராஜ். இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து வந்த பாக்கியராஜ் கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். 1979ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் தன்னுடைய உதவி இயக்குநரையே ஹீரோவாக்கி அழகு பார்த்தார். அதே ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் இயக்குநராகவும் பாக்கியராஜ் அறிமுகமானார்.
மகத்தான ஆளுமை: பாலசந்தர், பாக்கியராஜ் போல இயக்கத்திலும் பாக்கியராஜ் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தினார். ஆனால், அவர்களையும் தாண்டி நடிப்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக தனக்கொரு ரசிகர்கள் கூட்டத்தையே தனது யதார்த்தமான நடிப்பாலும் கிராமத்துக் கதைகளாலும் கூட்டியவர் தான் பாக்கியராஜ். இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுப் போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், இது நம்ம ஆளு என அவருடைய படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.
சொத்து மதிப்பு: தனது முதல் மனைவி பிரவீனா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட நடிகை பூர்ணிமாவை 1984ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் 10 கோடி மதிப்பில் அவருக்கு வீடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 50 லட்சம் மதிக்கத்தக்க கார் ஒன்றும் இருக்கிறதாம். நடிப்பு, இயக்கம் என அந்த காலத்திலேயே அதிகமாக சம்பாதித்து வந்த பாக்கியராஜ் இந்த வயதிலும் குணசித்ர வேடங்களில் நடித்துக் கலக்கி வருகிறார். ஒட்டுமொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு 50 முதல் 52 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் உள்ளன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன வசனத்தில் கூட ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கவும் இப்படியொரு ஆளுமையை தமிழ் சினிமா என்றென்றும் கொண்டாட வேண்டும்.


Click it and Unblock the Notifications











