அப்பா நீங்க இறந்ததுக்கு பிறகுதான் எனக்கு அது புரியுது.. பாக்யராஜ் மகள் எமோஷனல் போஸ்ட்
சென்னை: இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது குடும்பத்தினரின் ஒவ்வொரு பதிவும் சமூக வலைதளங்களில் பலரது மனதை உருக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தனது சிறுவயதில் அப்பா பாக்யராஜின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம், அவருடன் விளையாடும் அரிய நினைவு புகைப்படங்கள், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட தருணங்கள் என பல புகைப்படங்களை பகிர்ந்துள்ள சரண்யா, அதோடு தனது மொபைலில் இருந்த வாட்ஸ்அப் கால் லாக் ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டில், நாள் தோறும் பல முறை "Dad" என்ற பெயரில் வந்திருக்கும் கால் மற்றும் வீடியோ கால் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.
ஒரு வரியில் உடைந்த மனசு: அந்த பதிவுடன் அவர், "My daily call log will not look like this here after....💔 Never realised my maximum missed calls were always from you" என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதாவது, "இனிமேல் என் தினசரி கால் லாக் இப்படியே இருக்கப் போவதில்லை... என்னுடைய அதிகபட்ச மிஸ்டு கால்கள் எல்லாமே உங்களிடமிருந்து வந்தவை என்பதை இப்போதுதான் உணர்கிறேன்" என்று தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்பை சொல்லும் கால் லாக்: ஒரு தந்தை மகளிடம் நாள்தோறும் எத்தனை முறை பேச முயன்றார், எவ்வளவு அக்கறையுடன் தொடர்பில் இருந்தார் என்பதை ஒரு சாதாரண கால் லாக் கூட சொல்லிவிடும் என்பதை இந்த பதிவு உணர்த்துவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். "மிஸ்டு கால்களாக இருந்தவை இன்று வாழ்நாள் முழுவதும் மிஸ் பண்ணப் போகும் நினைவுகளாக மாறிவிட்டதே", "அப்பா இருந்தபோது சாதாரணமாக தெரிந்த கால் லாக், இன்று பொக்கிஷமாகிவிட்டது" என்று பலரும் கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.
குடும்ப பாசத்துக்கு பெயர் பெற்றவர்: திரைக்கதைகளில் குடும்ப உறவுகளை உயிரோட்டமாக காட்சிப்படுத்திய பாக்யராஜ், நிஜ வாழ்க்கையிலும் குடும்பத்தின் மீது அளவற்ற பாசம் கொண்டவர் என்று அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் பலரும் கூறியுள்ளனர். மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு, மகள் சரண்யா என குடும்பத்தினருடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் குறித்து பலமுறை பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், எந்த நீண்ட உரையும் இல்லாமல், ஒரு கால் லாக் ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஒரு வரி பதிவின் மூலம் தனது அப்பாவை நினைத்து சரண்யா வெளிப்படுத்திய வேதனை, பாக்யராஜ் ரசிகர்களை மட்டுமல்ல, பெற்றோருடன் வாழும் ஒவ்வொருவரையும் ஒரு நிமிடம் நின்று சிந்திக்க வைத்துள்ளது. அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications