Kaalidas 2: பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா 3 பேரும் மிரட்டுறாங்களே.. காளிதாஸ் 2 டீசர் எப்படி இருக்கு?
சென்னை: நடிகர் பரத்துக்கு பல வருடங்கள் கழித்து நல்ல வரவேற்பை பெற்ற படமாக காளிதாஸ் படம் அமைந்தது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் காக்கிச் சட்டை அணிந்துக் கொண்டு கலக்கியிருந்தார் சின்ன தளபதி. ஆனால், அதன் பின்னர், அவர் நடித்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், காளிதாஸ் 2 படம் மீண்டும் அவருக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 பாகங்களிலும் சூரிக்கு ஜோடியாக நடித்து "வழி நெடுக காட்டுமல்லி" என ரசிகர்களை பாட வைத்தார்.

அடுத்து இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக காக்கி யூனிஃபார்ம் அணிந்து நடித்துள்ளார். மேலும், விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கிறார். டீசரில் அவரது நடிப்பும் மிரட்டுகிறது.
காளிதாஸ் 2 டீசர் ரிலீஸ்: பைவ் ஸ்டார் செந்தில் தயாரிப்பில் காளிதாஸ் படத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இந்த காளிதாஸ் 2 படத்தையும் இயக்கியுள்ளார். பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி, ஆனந்த் நாக், அஜய் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். காளிதாஸ் படமே கடைசி வரை ரசிகர்களை சீட் எட்ஜுக்கு கொண்டு வந்து நிறுத்திய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்பது அந்த படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும் அதைவிட ரொம்பவே டேஞ்சரான, மர்மங்கள் நிறைந்த கிரைம் த்ரில்லர் படமாக காளிதாஸ் 2 இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
டீசர் எப்படி இருக்கு?: என்னை காப்பாத்துங்க என பெண் குரல் கேட்க டீசர் தொடங்குகிறது. ஆனால், போலீஸ் வருவதற்குள் இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். விசாரணை அதிகாரியாக பரத்தும் அவருக்கு துணையாக பவானி ஸ்ரீயும் வழக்கை விசாரிக்க, கதறி அழும் சிங்கிள் சீனிலேயே தனது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்து விட்டார் சங்கீதா. பொதுவாக சைக்கோ வில்லன்களை டீசரில் அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால், இங்கே கண்ணாடி போட்ட ஒருவரை காட்டும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. முதல் பாகம் மாதிரியே கடைசியில் கண்டிப்பாக பெரிய ட்விஸ்ட் இருக்குமா? அல்லது அந்த காளிதாஸ் படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமா என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடும். ரொம்ப நாளைக்குப் பிறகு மீண்டும் பரத்திடம் இருந்து ஒரு வொர்த்தான படமாக இந்த காளிதாஸ் 2 இருக்கும் என்று நம்புவோம்.
பிஜிஎம் மிரட்டல்: வழக்கம் போல சாம் சி.எஸ். தான் ஒரு பிஜிஎம் கிங் என நிரூபித்துள்ளார். சாதாரண விசாரணை காட்சிகளுக்கும் செம பிஜிஎம் போட்டு டீசர் முழுக்கவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் கொண்டு செல்ல உதவியிருக்கிறார். இயக்குநர் ஸ்ரீ செந்தில் காளிதாஸ் படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கதையை செதுக்கி காளிதாஸ் 2 படத்தை இயக்கியுள்ள நிலையில், நிச்சயம் ஏமாற்றமாட்டார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











