'ஜூமி'ல் நடந்த பொதுக்குழு.. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர் ஆனார் இயக்குனர் பாரதிராஜா!
சென்னை: தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகி இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.
பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.
முதலில் இதை மறுத்த பாரதிராஜா, பிறகு வலியோடு புதிய சங்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

இன்னொரு சங்கம்
'இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது. இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. இது செயல்பட வேண்டிய காலகட்டம்' என்று பாரதிராஜா கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் தாணு
இதற்கு சில தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். சங்கத்தை உடைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தாணு உள்பட பலர் கூறினர். இதனால் இது பரபரப்பானது. அதன்படி தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் இந்த சங்கம் தொடங்கியது. இதன் பொதுக்குழு கூட்டம் ஜூம் வாயிலாக நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக பாரதிராஜா
அதாவது தலைவராக பாரதிராஜா, பொதுச் செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன், எஸ்.ஆர். பிரபு, பொருளாளராக டி.ஜி. தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். கே. விஜயகுமார், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தி உள்ளார்.
Recommended Video

நிர்வாகக் குழு
நந்தகோபால் (மெட்ராஸ் என்டர்ப்ரைஸஸ்), மதன் (எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்) விஜயகுமார் (திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்), ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன் (2D என்டர்டெயின்மென்ட்), டில்லி பாபு (ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி), கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்), ஆர். கண்ணன் (மசாலா பிக்ஸ்) உள்பட 12 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிர்வாகிகள் இரண்டு வருடம் (29.8.2020 முதல் 28.8.2022 வரை) பொறுப்பில் இருப்பார்கள் என்று இந்த சங்கத்தில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











