மருத்துவமனையில் பாரதிராஜா.. இப்போது எப்படி இருக்கிறார்?.. அவரது குடும்பத்தினர் சொல்வது இதுதான்!
சென்னை: இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பாரதிராஜா வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்துவந்த அவர்; தனது மகன் மனோஜ் உயிரிழந்ததை அடுத்து அதையும் நிறுத்திவிட்டார். மகனின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்துவரும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவின் போக்கை முதன்முறையாக மாற்றியவர் என்றால் பாரதிராஜாதான். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமத்தில் இருக்கும் வயல்களும், ஆறுகளும், மனிதர்களும், வாழ்வியலும் திரைக்கு வந்தன. முக்கியமாக நாமும் படம் இயக்கலாம், சினிமாவில் இயங்கலாம் என்ற தைரியத்தோடு தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் சென்னைக்கு பலர் வருவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
எக்கச்சக்க அறிமுகங்கள்: அவர் இதுவரை எக்கச்சக்க நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ராதா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி, பாண்டியன், கார்த்திக் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். முக்கியமாக அவர் அறிமுகப்படுத்திய அத்தனை பேருமே தேசிய அளவில் கவனம் ஈர்த்த கலைஞர்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகரிடமிருந்தோ அல்லது நடிகையிடமிருந்தோ எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதற்கு அவர்தான் பல்கலைக்கழகம்.

நடிப்பிலும் தரம்: இயக்கத்தில் எப்படி தனது தடத்தை வீரியமாக பதித்தாரோ அதேபோல் நடிப்பிலும் கலக்கினார். அடிப்படையில் அவர் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தார். ஆனால் காலம் அவரை இயக்குநராக மாற்றியது. பாண்டியநாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் என எக்கச்சக்க படங்களில் பிஸியாக நடித்தார். அப்படிப்பட்ட சூழலில் அவரது வாழ்க்கையில் எதிர்பார்க்காத பெரிய இடி ஒன்று இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இறங்கியது.
மகன் மனோஜ் உயிரிழப்பு: அதாவது ஆசை ஆசையாக வளர்த்த மகன் மனோஜ் உடல்நல குறைவால் உயிரிழந்தார். மகன் மீது அதீத பாசம் வைத்திருந்தவர் பாரதிராஜா. மனோஜ் உயிரிழந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்த அவரை; அவருடன் பணியாற்றியவர்கள், நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். எப்படியும் நார்மல் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் திடீரென உடல்நல குறைவும் ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது.
குடும்பத்தினர் விளக்கம்: உடனடியாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து அவரது குடும்பத்தினர், "பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இப்போது அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











