மனோஜ் போய்ட்டான்.. மருமகளையும், பேத்திகளையும் நல்லா பார்த்துக்கணும்.. உருகும் பாரதிராஜா
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் அண்மையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நடந்தது. அவரது உயிரிழப்பு மிகப்பெரிய சோகத்தை பாரதிராஜாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது அவரை தேற்றிவிட வேண்டும் என்றுதான் அவருடன் பழகியவர்கள், அவரது குடும்பத்தினர் முட்டி மோதிவருகின்றனர். இந்நிலையில் அவரது மனநிலைமை குறித்து அவரின் சகோதரர் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகராக அவருக்கு விருப்பமில்லையென்றாலும் தனது தந்தையின் விருப்பத்துக்காக ஒத்துக்கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, பாரதிராஜாவின் இயக்கம் என்பதால் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் சரியாக போகவில்லை. மாறாக படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. இதனால் மனோஜுக்கு ஓரளவு அடையாளம் கிடைத்தது.
வரிசையாக தோல்வி படங்கள்: முதல் படம் சரியாக போகாததால் கொஞ்சம் அப்செட் ஆனாலும் அடுத்தடுத்து படங்களை தொடர்ந்து கமிட் செய்தார் மனோஜ். அதன்படி நடித்த படங்களில் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படமும், சமுத்திரம் திரைப்படமும்தான் அவருக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தன. மற்ற படங்கள் எல்லாம் சரியாக போகவில்லை. அதேசமயம் முரளியுடன் நடித்த கடல் பூக்கள் திரைப்படத்தில் மனோஜின் நடிப்புக்கு நல்ல பெயரே கிடைத்தது. பிறகு அல்லி அர்ஜுனாவும் ஓரளவுக்கு அவருக்கு பெயரை வாங்கி தந்தது.

இயக்குநராக மாறிய மனோஜ்: இதற்கிடையே இயக்குநராக வேண்டுமென்றுதான் மனோஜுக்கு ஆசை இருந்தது.அதனால் முதலில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு பாரதிராஜாவிடமும் சில நாட்கள் உதவி இயக்குநராக பணியாற்றினார். கால சூழ்நிலைகள் அவரை ஹீரோவாக மாற்றியது. ஆனால் அது கைகொடுக்காததால் ஷங்கரிடம் எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். பிறகு சில வருடங்களுக்கு முன்பு மார்கழி திங்கள் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் அவருக்கு தோல்வியையே கொடுத்தது.
பயங்கர ஸ்ட்ரெஸ்?; ஹீரோவாகவும் வெல்ல முடியவில்லை; இயக்குநராகவும் வெல்ல முடியவில்லை என்பது அவருக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தது. அதனை அவரே ஒரு பேட்டியிலும் பகிர்ந்திருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு பூரண உடல்நலத்துடன் வீட்டில் ஓய்வில் இருந்தார். ஆனால் அண்மையில் மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி வந்ததன் காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மிகப்பெரிய சோகத்தை பலரிடமும் ஏற்படுத்தியது.
மனைவி, குழந்தைகளின் நிலைமை: சாதூரியன் என்கிற படத்தில் நடித்தபோது உடன் நடித்த நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மனோஜ். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இப்போது மனோஜின் உயிரிழப்பு பாரதிராஜா மட்டுமின்றி நந்தனாவையும் கடுமையான சோகத்துக்கு தள்ளியிருக்கிறது. எப்படியாவது அவரை தேற்றிவிட வேண்டும் என்பதிலும் குடும்பத்தினர் இருக்கிறார்கள். இந்நிலையில் பாரதிராஜாவின் மனநிலை குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.
ஜெயராஜ் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பாரதிராஜாவுக்கு சில நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வீட்டுக்கு வருபவர்களிடம் மனோஜ் பற்றி சொல்லி அழுகிறார். மனோஜின் புகைப்படத்தை பார்த்து அழுகிறார். மாடியில் விட்டுவிட்டு வந்தால் அவராகவே கீழே வந்து உட்கார்ந்துகொள்கிறார். முக்கியமாக மருமகளையும் பேத்திகளையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் ரொம்பவே வேதனையாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











