மனோஜின் மனைவி நிலைமைய நினைத்தால்.. சாவை நேர்ல பார்த்தாங்க.. எப்படி இருக்கும்?.. கலங்கிய சித்தப்பா
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவுக்கு பெரிய இடியாக இறங்கியிருக்கிறது. தனது மகன் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவர் இன்னமும் வரவில்லை. அவர் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் மனோஜின் மனைவி நந்தனாவும் பெரிய சோகத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் அளித்த பேட்டி ஒன்றை பார்த்த ரசிகர்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
இயக்குநர் இமயம் என கொண்டாடப்படும் பாரதிராஜா தனது மகன் மனோஜை தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். எத்தனையோ பேரை அறிமுகம் செய்து வைத்து அவர்களது வாழ்க்கையையே மாற்றிக்காட்டிய அவர்; தனது மகனின் வாழ்க்கையும் மாறும் என்றுதான் நினைத்தார். ஆனால் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. முதல் படம் படுதோல்வியை சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மட்டும் அந்தப் படத்துக்கு நல்லதொரு வெளிச்சத்தை கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்விகள்: தாஜ் மஹால் தோல்விக்கு பிறகு வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம், கடல் பூக்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார் மனோஜ். அவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் ஓரளவுக்கு ஹிட்டடித்தது. கடல் பூக்கள் திரைப்படம் கதை ரீதியாக நன்றாக இருந்தது. அவரது நடிப்புக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. சினிமாவில் நிலைக்க கமர்ஷியல் ஹிட் அவசியம். அது கடைசிவரை மனோஜுக்கு கைகூடவே இல்லை.

இயக்குநர் மனோஜ்: இதற்கிடையே அவருக்கு மணிரத்னம் மற்றும் ஷங்கரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டதும் அவர்தான். உதவி இயக்குநராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு படம் இயக்க கமிட்டானார். அதன்படி சுசீந்திரன் கதையில் உருவான மார்கழி திங்கள் படத்தை இயக்கினார். அதில் பாரதிராஜாவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து கதைகள் எழுதும் வேலையிலும் மும்முரமாக இருந்தார் அவர்.
ஆபரேஷன் செய்துகொண்ட மனோஜ்: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு பிறகு தனது வீட்டில் முழு ஓய்வில் இருந்தார். ஆனால் கடந்த மாதம் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்தபடியே தனது உயிரை விட்டார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அதிலும் அவரது இறுதிச்சடங்கின்போது பாரதிராஜா கதறி அழுதது பார்க்கும் அனைவரையும் கலங்க செய்தது. சமீபத்தில்கூட அவரை எப்படியாவது தேற்றுவதற்கு கங்கை அமரன் நேரில் சென்று பழைய நினைவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்த வீடியோவும் உருக்கமாக அமைந்தது.
சகோதரர் பேட்டி: இந்நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "வீட்டில் மாலை நேரத்தில் பப்பாளி பழம் சாப்பிட்டார். அதன் பிறகு அவரது மனைவியிடம் டீ கேட்டிருக்கிறார். உடனே அவரின் மனைவியும் அடுப்பறைக்கு சென்று டீ போட்டு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் எனக்கு என்னமோ செய்யுது என்று சொல்லியபடியே மனோஜ் உயிரை விட்டிருக்கிறார். இதை கேள்விப்படும் நமக்கே இப்படி இருக்கிறதே; தனது கணவனின் மரணத்தை நேரில் பார்த்த நந்தனாவின் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்க. பெரிய கொடுமை அது. தனது கணவரின் மரணத்தை நேரில் பார்த்தபோது அவர் எப்படி துடித்து போயிருப்பார்" என்றார். முன்னதாக சாதூரியன் படத்தில் நடித்தபோது நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மனோஜ்.


Click it and Unblock the Notifications











