எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம்.. தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாரதிராஜா வாழ்த்து
சென்னை: எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

என்.ராமசாமி
துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்ற முரளி தலைவராக வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், மன்னன் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

நடப்பு தயாரிப்பாளர்
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக இருக்கும் இயக்குனர் பாரதிராஜா, புதிய நிர்வாகிகளை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன்.

நிறைய சவால்கள்
தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன.

செயலாற்ற வேண்டும்
இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும். முரளி இராம நாரயணன் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

மகிழ்கிறோம்
என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ, அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











