எங்கள் மாமா பாரதிராஜா இன்னும் இறக்கவில்லை.. இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.. உறவினர் காட்டம்
சென்னை: இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பாரதிராஜா வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்துவந்த அவர்; தனது மகன் மனோஜ் உயிரிழந்ததை அடுத்து அதையும் நிறுத்திவிட்டார். மகனின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் என்றால் பாரதிராஜாதான். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமத்தில் இருக்கும் வயல்களும், ஆறுகளும், மனிதர்களும், வாழ்வியலும் திரைக்கு வந்தன என பலர் சொல்வதுண்டு. முக்கியமாக நாமும் படம் இயக்கலாம், சினிமாவில் இயங்கலாம் என்ற தைரியத்தோடு தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் நம்பிக்கையோடு பலர் சென்னைக்கு வந்ததற்கான விதையை போட்டதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயதினிலே படத்தில் தொடங்கி ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

பாரதியின்அறிமுகங்கள்: அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக நடிகர், நடிகைகளை அறிமுக்ப்படுத்தியவரும் இவர்தான்.ராதா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி, பாண்டியன், கார்த்திக் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். முக்கியமாக அவர் அறிமுகப்படுத்திய அத்தனை பேருமே தேசிய அளவில் கவனம் ஈர்த்த கலைஞர்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகரிடமிருந்தோ அல்லது நடிகையிடமிருந்தோ எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதற்கு அவர்தான் பல்கலைக்கழகம். வயோதிகம் காரணமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.
மகன் மனோஜ் உயிரிழப்பு: நிலைமை இப்படி இருக்க ஆசை ஆசையாக வளர்த்த மகன் மனோஜ் உடல்நல குறைவால் உயிரிழந்தார். மகன் மீது அதீத பாசம் வைத்திருந்தவர் பாரதிராஜா. மனோஜ் உயிரிழந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்த அவரை; அவருடன் பணியாற்றியவர்கள், நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே கொண்டு வந்துகொண்டிருந்தார்கள்.
உடல்நலகுறைவு: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டுவந்தது. ராதிகா உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார்கள். கண்டிப்பாக பாரதிராஜா நலமுடன் மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறையிலிருந்து பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறியும், தேற்றியும் வருகிறார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா: இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலை நான்கு மணிக்கு நீலாங்கரையில் இருக்கும் இல்லத்தில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பினர். ஆனால் அதனை இயக்குநரும், பாரதிராஜாவின் உறவினருமான மனோஜ்குமார் மறுத்துவிட்டார். மேலும், 'பாரதிராஜா இப்போது ஐசியூவில் சிகிச்சையில் இருக்கிறார். அதற்குள் இப்படி தகவலை பரப்பிவிட்டிருக்கிறார்கள்' என தெரிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புகூட, இயக்குநர் பாரதிராஜா இறந்துவிட்டார் என்று இதே மாதிரி வதந்தி பரவியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
