Ilayaraaja Biopic - எந்த ராஜாவானாலும் இளையராஜாவுக்கு கீழேதான்.. பாரதிராஜா சரவெடி பேச்சு.. அதிர்ந்த அரங்கம்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார். இதன் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா. பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர்.
பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.
நாடகங்களிலும்: மேடையில் வாசிப்பாளராக மட்டுமின்றி பல நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி வாத்தியங்கள் ஏதும் வாங்க பணம் இல்லாததால் வெறும் பூட்டுக்களை வைத்துக்கொண்டு மட்டுமே இசையமைத்த வரலாறு எல்லாம் ராஜாவுக்கு உண்டு. அவர் இசையை வாத்தியங்களிலிருந்து எடுக்காமல் தனது வாழ்க்கையிலிருந்து எடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர் ஜன கான ராஜாவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார்.
படத்தின் பூஜை: இந்நிலையில் இன்று படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன், வெற்றிமாறன், தனுஷ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, "இளையராஜாவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் பூட்டிலேயே இசை அமைத்தவன். அவன் கண்டிப்பாக ஒரு அதிசயம்தான். அவன் ஹார்மோனியத்தை வாசிப்பதில்லை. ஹார்மோனியமே அவனை அழைத்து என்னை வாசி வாசி என்று சொல்கிறது.
எந்த ராஜாவானாலும் கீழேதான்: அவன் மூச்சு விட்டால்கூட இசையாகத்தான் வரும். இந்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களையும் ஒன்று திரட்டி இளையராஜாவுக்கென்று பிரமாண்டமாக விழா ஒன்றை எடுக்க வேண்டும். அவனை பற்றி பேசிக்கொண்டே போகலாம். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று எனது வீட்டில் சொன்னார்கள். ஆனால் இளையராஜாவின் விழா ஆச்சே. நான் எப்படி வீட்டில் சும்மா படுத்துக்கிடப்பது. ஒன்று சொல்கிறேன் எந்த ராஜாவானாலும் இளையராஜாவை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இளையராஜா எப்போதும் மேலேதான் இருப்பான்" என்றார்.


Click it and Unblock the Notifications











