சுயநலமற்ற நிர்வாகிகள் காலத்தின் கட்டாயம்.. புதிய சங்கம் பற்றி இயக்குனர் பாரதிராஜா திடீர் அறிக்கை!
சென்னை: எனது தலைமையில் புதிய தயாரிப்பாளர் அமைப்பு உருவாவது பற்றி வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தயாரிப்பாளர்
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதுமே தயாரிப்பாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி தங்களது வாட்ஸ் அப் குரூப்களில் பேசி வந்தனர். இது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆக்டிவாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள், முன்னாள் தயாரிப்பாளர்கள் என்ற பிரச்னையும் எழுந்தது. இதனால் சில தயாரிப்பாளர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர்.

இயக்குனர் பாரதிராஜா
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போட்டியாக புதிய சங்கம் உருவாகி இருக்கிறது என்றும் இந்தச் சங்கத்துக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் இதன் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், பொதுச்செயலாளராக டி.சிவா, பொருளாளராக தியாகராஜன், இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

போட்டி அமைப்பு தேவையா?
இதனால் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போட்டியாக இன்னொரு சங்கத்தை உருவாக்க வேண்டாம் என்று பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் அதிகாரியாக நீதியரசர் ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடந்துவரும் நிலையில் இந்தப் போட்டி அமைப்பு தேவையா? என்றும் இதுபற்றி தமிழக முதலமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

காலத்தின் கட்டாயம்
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்னையுமின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க, சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

உண்மையும் இல்லை
நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தப் பிறகே, அதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்டப் பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











