Manobala Death - மனோபாலா உயிரிழப்பு - உச்சக்கட்ட விரக்தியில் பாரதிராஜா
சென்னை: Manobala Death (மனோபாலா உயிரிழப்பு) என் மாணவன் மனோபாலாவின் உயிரிழப்பு எனக்கும், தமிழ் சினிமாவுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என இயக்குநர் பாரதிராஜா விரக்தியுடன் தெரிவித்திருக்கிறார்.
கமல் ஹாசன் பரிந்துரைத்ததை அடுத்து மனோபாலாவின் திறமைய உணர்ந்த இயக்குநர் பாரதிராஜா புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். சேர்ந்த முதல் படத்திலேயே மனோபாலாவின் திறமையையும், சின்சியரையும் உணர்ந்துகொண்டதால் பாக்யராஜ், மணிவண்ணன்போல் மனோபாலாவையும் தனக்கு நெருக்கமான மாணவர்களில் ஒருவராக கருதினார் பாரதிராஜா.

நடிப்பில் ஆர்வம்: இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் மனோபாலாவுக்கு ஆரம்பத்திலேயே ஆர்வம் இருந்ததாக தெரிகிறது. அதனையும் உணர்ந்துகொண்ட பாரதிராஜா புதிய வார்ப்புகள் படத்திலேயே அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களையும், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் படத்தையும் இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.
இயக்கத்துக்கு டாட்டா: கடைசியாக அவர் 2002ஆம் ஆண்டு நைனா என்ற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இயக்கத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் தான் தோன்றிய படங்களில் தனது நடிப்பின் மூலம் தனித்து தெரிய ஆரம்பித்தார். கடைசியாக அவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் இயக்கிய மனோபாலா: இதற்கிடையே திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களையும் இயக்கியிருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவான பஞ்சவர்ணம், புன்னகை மன்னன் உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய அவர் சீரியல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் வேஸ்ட் பேப்பர் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி நடத்திவந்த அவர், குக் வித் கோமாளியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையொட்டி அவர் சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் தள்ளியுள்ளது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரக்தியில் பாரதிராஜா: இந்நிலையில் இயக்குநரும், மனோபாலாவின் குருநாதருமான பாரதிராஜா தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என விரக்தியுடன் பதிவிட்டிருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை சொல்லிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











