'பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்கவில்லை... நாமாவது கவுரவிப்போம்!'
சென்னை: தமிழ் சினிமாவின் ஞானக்கிறுக்கனான பாரதிராஜாவுக்கு சினிமா நூற்றாண்டு விழாவில்தான் மரியாதை தரவில்லை... நாமாவது கவுரவிப்போம், என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூறினார்.
இளையதேவன் இயக்கிய 'ஞான கிறுக்கன்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.

விழாவில் பார்த்திபன் பேசும்போது, "பாரதிராஜாவுக்கு சினிமா தவிர ஒன்றும் தெரியாது. தமிழ் சினிமாவின் 'ஞான கிறுக்கன்' அவர்.
சினிமா மேல் பித்து பிடித்த மகா கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் இமயம் அந்த மனிதர்.
அப்படிப்பட்ட பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் இந்த மேடையில் அவரை கவுரவிப்போம்," என்றார்.
பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











