Bharathiraja in OTT - பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் ஆந்தாலஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை: Bharathiraja in OTT (ஓடிடியில் பாரதிராஜா) பாரதிராஜா உள்ளிட்ட ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ஆந்தாலஜியின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.

பாரதிராஜா இயக்கிய கடைசி படம்: பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார்.
காலத்துக்கேற்ப மாறிய பாரதிராஜா: கொரோனா பெருந்தொற்று உலகத்தில் பல விஷயங்களை மாற்றி வைத்திருக்கிறது. அதில் திரைத்துறையும் ஒன்று. கொரோனா வந்த பிறகு திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றன. அதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழிலும் முன்னணி இயக்குநர்கள் ஓடிடியில் வெப் சீரிஸ், ஆந்தாலஜி சீரிஸ் உள்ளிட்டவைகளை இயக்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜாவும் ஓடிடியில் களமிறங்கியிருக்கிறார்.

ஆறு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி: இந்தச் சூழலில் மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். இந்த ஆந்தாலாஜி தொடரானது மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அத்தியாயம்: இந்த வெப் தொடரின் முதல் அத்தியாயமாக லாலா குண்டா பொம்மைகள் உருவாகியிருக்கிறது. இதனை குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வசுந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இரண்டாவது அத்தியாயம்: இதன் இரண்டாவது அத்தியாயமாக இமைகள் உருவாகியிருக்கிறது. இதனை கல்லூரி, காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அசோக் செல்வன், டிஜே பானு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மூன்றாவது அத்தியாயம்: மூன்றாவது அத்தியாயமாக 'காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி' உருவாகியிருக்கிறது. இதனை கிருஷ்ணகுமார் ராம்குமார் என்பவர் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சம்யுக்தா விஸ்வநாதன், ரித்து வர்மா, பவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்..

நான்காவது அத்தியாயம்: நான்காவது அத்தியாயமாக மார்கழி உருவாகியிருக்கிறது. இதனை அக்ஷய் சுந்தர் என்பவர் இயக்க இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா தயாள், சஞ்சுளா சாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இ தற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
பாரதிராஜாவின் அத்தியாயம்: ஆந்தாலஜியின் ஐந்தாவது அத்தியாயத்தை பாரதிராஜா இயக்கியிருக்கிறார். அதற்கு 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்திருக்கிறார். விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அதேபோல் தியாகராஜா குமாரராஜா இயக்கியிருக்கும் ஆறாவது அத்தியாயத்துக்கு நினைவோ ஒரு பறவை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாமிகா, பீபி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கும் இளையராஜாவே இசை.
எப்போது ரிலீஸ்?: பாரதிராஜா முதல்முறையாக ஓடிடிக்காக இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதன் காரணமாக எப்போது இந்த ஆந்தாலாஜி ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 18ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











