பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை நடப்பது எங்கே? மண்வாசனை பேசியவருக்கு சொந்த மண்ணில் நல்லடக்கம்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகரள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அவருக்கு இறுதி மரியாதை சென்னையில் நடைபெறவுள்ளதா? இல்லை அவரது சொந்த ஊரிலா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவுக்கு சென்னையிலேயே இறுதி மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இரவு 9மணிக்கு சென்னையிலிருந்து அவருடைய உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்படும் என்றும்,
நாளை தேனியில் 3மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று பாடலாசிரியரும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும், வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் செல்லும் பாதையில் உள்ள அவர்களின் சொந்த நிலத்தில், நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, இறுதி அஞ்சலியை கவிதையாக பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “பிதாமகனே போய் விட்டாயா?
கிராமத்து ராஜாவே இறந்து பட்டாயா?
எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?
அடைத்து கிடந்த திரை உலக கதவுகளை
திறந்த வெளிக்கு திறந்துவிட்டவனே!
ஆகாயத்திற்கு அடுத்து
அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே!
என்னையும் சுயமரியாதையோடு
சுடர் ஒளி வீசச் செய்தவனே!
உடன்பிறப்பே.. ரத்தத்தின் ரத்தமே..
என்று தலைவர்களின் மொழிக்கு இணையாக,
'என் இனிய தமிழ் மக்களே' என்ற ரத்தின சொற்களுக்கு
முத்திரை சேர்த்தவனே!
நீ மாயக்காரன்.. புழுதியை பொன் செய்தாய்!
சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை,
கருப்பு என்று மாத்திய கலை ஆளன் நீ!
இடிந்த சுவர்களும்.. உடைந்த மனிதர்களும்..
கிழிந்த வாழ்க்கையும் உன் கதையின் கச்சா பொருட்கள்!
இந்த கரட்டுப்பட்டியை டெல்லி நகரத்திற்கு
கொண்டு சேர்த்த அல்லிநகரத்து அரசன் நீ!
இனி நான் எப்படி தனியாக தேனி போவேன்?
மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளால்
அழுது கொண்டே கேட்குமே.. 'எங்கே பாரதிராஜா?'
கத்தாலம் காட்டுக்கு கருச்சா கேட்குமே.. 'எங்கே பாரதிராஜா?'
கருவேலம் மரம் கேட்குமே.. 'எங்கே பாரதிராஜா?'
என்ன பதில் சொல்வேன்? எப்படி நான் தனித்து இருப்பேன்?
நீ தூரிகை.. நான் வண்ணம்!
நான் தூரிகை.. நீ வண்ணம்!
தூரிகை இல்லாமல் வண்ணமும்,
வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும்?
நீ அறிவாள்.. நான் கைப்பிடி!
நான் அருவாள்.. நீ கைப்பிடி!
அருவாள் இல்லாத கைப்பிடியும்,
கைப்பிடி இல்லாத அரிவாளும் என்னத்துக்கு ஆகும்?
என்னை அழ விடு..
என் உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய் கரையட்டும்!
இனி என்ன எழுத..?
நடிகர் திலகம் மறைந்தபோது புலம்பியது போல்
நானும் புலம்புகிறேன்..
'பூங்காற்று திரும்புமா.. என் பாட்ட விரும்புமா..'
பாராட்ட மடியில் வைத்து தாலாட்ட,
எனக்கு ஒரு தாய்மடி கிடைக்குமா?
முதல் மரியாதை செய்த வண்ணம் உனக்கு..
இதோ என் இறுதி மரியாதை" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications