Bharathiraja: கடந்த 10 வருசமா பாரதிராஜா அதை சொல்லிட்டே இருப்பாரு.. சேலம் RR பிரியாணி ஓனர் எமோஷனல்
சென்னை: ஜூன் 10ஆம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார். அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாக பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், " எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், சினிமா வாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானவர். அவரை இழந்தது பெரும் வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு நன்றிகள். அவரது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு என்னை மட்டும் அழைத்திருந்தார். நான் மட்டுமே வந்திருந்தேன். என் மீது எப்போதும் அன்பாக இருப்பவர்.
எனது சேலம் RR பிரியாணி கடையைப் போல, தேனியில் BRR பிரியாணி என்று அவரது பெயருடன் கடை வைக்க வேண்டும், தேனி மக்களுக்கு குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்ய வேண்டும் என்று எல்லாம் என்னிடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்தார். மேலும் அவர் நினைத்ததைப் போலவே வாழ்ந்தார். தற்போது அவர் நினைத்ததைப் போலவே அவரது தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்கிறார்கள். இதையும் என்னிடத்திலேயே அவர் பலமுறை கூறியுள்ளார்.
எனக்கு திரை உலகில் இன்றைக்கு இத்தனை நண்பர்கள் இருக்க காரணமே அவர்தான். அவர் என்னை ஊடகங்களில் பேசு என்று கூறி ஊக்கப்படுத்தியவர். இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டக் களத்தில் தான் அவர் எனக்கு அறிமுகம். இன்றைக்கு நான் இலங்கையில் எனது நிறுவனத்தை நடத்துகிறேன் என்றால் அது எல்லாம் அவர் கொடுத்த தைரியம்.

கடைசி காலத்தை கணித்தே வாழ்ந்தார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல, அவர் சொன்னால் அனைவரும் கட்டுப்படுவார்கள். அந்த அளவுக்கு மிகவும் தைரியமானவர். அவரது வாழ்க்கை வருங்கால இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக கட்டாயம் இருக்கும். தனது கடைசி காலத்தை கணித்தே வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் தனது வீட்டில் வேலை செய்பவர்களை தனது பிள்ளைகளாகவே நினைத்து வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது அம்மாவும் மனைவியும் இருந்து எப்படி பார்த்துக் கொள்வார்களோ அதுபோல தன்னைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்.
குடும்பத்தினர்: அவரது கடைசி காலத்தில் அவரை அவரது குடும்பத்தினர் பார்த்துக் கொள்ளாமல் இல்லை. மருத்துவமனையில் அனுமதித்து உயர் சிகிச்சை வழங்கியது வரை குடும்பத்தினர் தான். இறக்கும் போது யாரும் உடன் இல்லாமல் இருந்துவிட்டார்கள். மற்றபடி குடும்பத்தினர்தான் அவரை கடைசி வரை பார்த்துக் கொண்டார்கள்" என்று மிகவும் எமோஷனலாக பேசினார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications