என்னை விட்டுட்டு போய்ட்டியே மனோஜ்.. கதறி அழுது கீழே விழப்போன பாரதிராஜா..நெஞ்சை கனக்க வைக்கும் காட்சி
சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் தள்ளியிருக்கிறது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரையுலகத்தினர் நீலாங்கரைக்கு வந்திருக்கின்றனர். பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மனோஜின் உடலை பார்த்து பாரதிராஜா கதறி அழுத காட்சிகளை பார்க்கையில் நெஞ்சை கனக்க வைக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ஒரு படமும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்று தரவில்லை. எப்படியாவது திரைத்துறையில் வென்றுவிட வேண்டும் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தார் அவர். பாரதிராஜாவும் அதற்கான பல முயற்சிகளில் இறங்கினாலும் அது எதுவும் கைகொடுக்கவில்லை என்பது சோகமான உண்மை.
நடிகராகும் ஆசையில்லை: மனோஜை பொறுத்தவரை அவருக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததில்லை. அதனை அவரே ஒரு மேடையில் பகிர்ந்திருக்கிறார். ஆனால் தன்னால்தான் நடிகராக முடியவில்லை தன்னுடைய மகனாவது நடிகராக வென்றுவிட வேண்டும் என்கிற சின்ன விருப்பம் பாரதிராஜாவுக்கு இருந்தது. அதன் காரணமாகத்தான் மனோஜை ஒரு நடிகராக வெல்ல வைக்க ஏகப்பட்ட விஷயங்களை செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மனோஜ்: தனது தந்தை போலவே தானும் ஒரு இயக்குநராக வெல்ல வேண்டும் என்பதுதான் மனோஜின் தீராத ஆவல். அதற்காக பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். முதலில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார். ஆனால் அது சரியாக வரவில்லை. அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் எழுதிய கதையை மார்கழி திங்கள் என்கிற பெயரில் படமாக இயக்கினார். அதில் புதுமுகங்கள் மற்றும் பாரதிராஜா நடித்தார்கள். ஆனால் படம் சரியாகவில்லை.

குணசித்திர வேடம்: இதற்கிடையே சினிமாவில்தான் தன்னை தக்க வைத்திருந்தார் மனோஜ். அதன்படி ஈஸ்வரன், மாநாடு, கொம்பன் என வரிசையாக குணசித்திர வேடங்களை ஏற்க ஆரம்பித்தார். ஓரளவுக்கு அதில் வெல்லவும் ஆரம்பித்தார். கண்டிப்பாக தமிழ் திரையுலகில் மனோஜ் தவிர்க்க முடியாத கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பார் என்றுதான் பலரும் ஆரூடம் கூறினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கதறி அழுத பாரதிராஜா: வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் ஓய்வில் இருந்தார் மனோஜ். ஆனால் நேற்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது. நந்தனா என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். அவரது இறுதி அஞ்சலி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. திரையுலகத்தை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் மகனின் இறப்பு செய்தியை கேட்டதும் பாரதிராஜா உடனடியாக மகனை பார்ப்பதற்காக வந்தார். காரில் வரும்போதே அழுதபடி வந்த அவர்; குளிர்சாதன் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த மனோஜின் உடலை பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அந்த சமயத்தில் சிறிது தடுமாறி கீழே விழவும் போனார். நல்வாய்ப்பாக அருகிலிருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்துவிட்டார்கள். தொடர்ந்து மனோஜின் உடல் அருகே அழுதபடி இருந்த அவரை அருகிலிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிவருகிறார்கள். இருப்பினும் இந்த இழப்பிலிருந்து இந்த வயதில் பாரதிராஜாவால் மீண்டு வருவது ரொம்பவே கடினம் என்று ரசிகர்கள் சோகத்துடன் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











