twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா... மணிவண்ணன் பற்றிய தரக்குறைவான கமெண்ட்ஸ்!- முகம் சுழிக்க வைக்கும் பாரதிராஜா!

    By Shankar
    |

    Ilayarajaa , Manivannan and Bharathiraja
    இசைஞானி இளையராஜா சகோதரர்கள் வெறும் 10 ரூபாயோடு வந்தவர்கள் என்றும், இயக்குநர் மணிவண்ணன் ஒரு பிச்சைக்காரனைப் போன்றவர் என்றும் மிகக் கேவலமாகக் கூறி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

    கடந்த மூன்று வாரங்களாக விகடன் மேடையில் வாசகர்கள் கேள்விக்கு தமிங்கிலீஷில் பதிலளித்து படுத்தி வருகிறார் பாரதிராஜா. 25 சதவீதம் தப்புத்தப்பான ஆங்கிலமும், மீதி தமிழுமாக 'கொன்னு கொலையெடுக்கின்றன' அவரது பதில்கள்!

    எதிர்ப்பார்த்தது போலவே பாரதிராஜாவிடம் அதிக அளவு இளையராஜா பற்றியே கேள்விகள் வருகின்றன. இது அவரை மகா கடுப்பாக்கியிருக்கிறது.

    இந்த வாரம், இளையராஜாவைத் தவிர உங்களுக்கு நெருக்கமான நண்பன் யார் என்ற கேள்விக்கு, 'இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கர்தான் என் நெருக்கமான நண்பன். அவன் மூலமாத்தான் ராஜாவே எனக்குப் பழக்கமாகி, என் நாடகங்களுக்கு மியூஸிக் பண்ணான். அப்புறம் நான் சென்னைக்கு வந்து தங்கி, சினிமா வாய்ப்புத் தேடிட்டு இருந்த சமயம், அப்படி இப்படினு காசை மிச்சம் பிடிச்சு நாடகம் நடத்த 270 ரூபாய் சேர்த்துவெச்சேன். திடீர்னு ஒருநாள் விடிகாலையில பாஸ்கர், ராஜா, அமரன் மூணு பேரும் என்னோட அறைக்கு வந்து கதவைத் தட்டினாங்க. 'உன்னை நம்பி வந்துட்டோம்பா... இதுதான் கையிருப்பு'னு ஒரே ஒரு 10 ரூபாய் தாளைக் கண்ல காமிச்சாங்க. அப்புறம் என்ன... நாடகத்துக்காகச் சேர்த்த பணமெல்லாம் நட்புக்காகச் செலவாச்சு. பிகாஸ்... பாஸ்கர் என் நண்பன்!," என்று கூறியுள்ளார்.

    இதுவாவது பரவாயில்லை, இயக்குநர் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா கூறியுள்ள பதில் மகா கேவலமாக அமைந்துள்ளது. பல வாசகர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

    அவர் கூறியுள்ள பதிலின் ஒரு பகுதி...

    "மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

    ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே'னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்'னு அவங்க சொன்னாங்க.

    ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க'னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். 'சரி'னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் 'காதல் ஓவியம்' படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். 'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்'னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

    மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

    ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க'னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''

    -இப்படிக் கூறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பற்றி பேசிய மணிவண்ணன், 'பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்," என்று கூறியிருந்தார். அதற்கு பதிலுக்கு பதில் தருவதாக நினைத்து இப்படிக் கூறியுள்ளார் பாரதிராஜா.

    English summary
    Bharathiraja has registered worst comments on Ilayarajaa and Manivannan recently in Ananda Vikatan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X