வீட்டில் நிம்மதியே இல்லை.. சாப்பிட வந்தாலே மன உளைச்சல் தான்.. பவதாரிணி பேட்டியில் சொன்ன விஷயம்!
சென்னை: பிரபுதேவா நடித்த ராசய்யா படத்துக்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தில் முதன் முதலாக தனது மகள் பவதாரிணியை ஒரு பாடல் கொடுத்து பாட வைக்கலாம் என நினைத்தார். "மஸ்தானா மஸ்தானா" பாடல் மூலம் இசை மற்றும் சினிமா உலகத்துக்குள் பவதாரிணியும் உள்ளே நுழைந்தார்.
"ஒளியிலே தெரிவது தேவதையா", "காற்றில் வரும் கீதமே", "மயில் போல பொண்ணு ஒண்ணு" என அவர் பாடிய அத்தனை பாடல்களுமே ஹிட் அடித்து வந்தன. எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பா தான் என்றும் சிறு வயதில் இருந்தே அவரை பார்த்தும் எங்கள் வீட்டில் எங்க சகோதரர்கள் பண்ணும் இசை கச்சேரிகளை பார்த்து வளர்ந்ததிலேயே எனக்கும் இசை மீது ஆர்வம் வந்து விட்டது என பேட்டி ஒன்றில் கூறிய பவதாரிணி, தனக்கு எதனால் மன உளைச்சல் ஏற்படும் என்பதையும் கூறி அதிர்ச்சியை கிளப்பி இருந்தார்.

பாடகி பவதாரிணி: 1976ம் ஆண்டு பிறந்த பவதாரிணி 1995ம் ஆண்டு யார் கண்ணன் இயக்கத்தில் பிரபுதேவா, ரோஜா, நம்பியார், ராதிகா நடிப்பில் வெளியான ராசய்யா படத்தில் அப்பா இளையராஜாவின் இசையில் வெளியான "மஸ்தானா மஸ்தானா" பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதற்கு முன்பே சிறு வயதிலேயே மைடியர் குட்டிச்சாத்தான் எனும் மலையாளப் படத்தில் அவர் பாடிய பாடல் வெளியானது. விஜயகாந்தின் அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கம், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பா, கோவா, மங்காத்தா, அனேகன் மற்றும் கடைசியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் இவர் பாடல் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் பவதாரிணி: நடிகை ரேவதி இயக்கிய மித்ரு மை ஃபிரெண்ட் படத்தில் தான் முதன்முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார் பவதாரிணி. அவுனா எனும் தெலுங்கு படம், பிர் மிலாங்கே எனும் இந்தி படம், கீயா கீயா எனும் கன்னட படம், அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, போரிட பழகு, கள்வர்கள் மற்றும் மாயநதி என சுமார் 10 படங்களுக்கு பல மொழிகளில் இசையமைத்து அசத்தியவர் பவதாரிணி.
இசைக்குடும்பம்: அப்பா இளையராஜாவுக்கு எந்தவொரு அறிமுகமும் தேவையில்லை. சிறு வயதில் இருந்தே அவர் கம்போஸ் பண்ணுவதை பார்த்தே நானும் என் சகோதரர்களும் வளர்ந்தோம். ரெக்கார்டிங் தியேட்டரில் எந்தளவுக்கு கண்டிப்புடன் இருப்பாரோ அதே அளவுக்கு கண்டிப்பு எங்கள் வீட்டிலேயும் இருக்கும். அண்ணன் கார்த்திக் ராஜா தான் அப்பாவுக்கு எப்போதுமே உயிர். அவருடன் தான் அதிக நேரம் இசைப்பற்றி பேசுவார். என்னிடமோ என் தம்பி யுவனிடமோ அதிகமாக இசைப்பற்றி அப்பா பேசியது கிடையாது என்றார்.
வீட்டில் மன உளைச்சல்: எப்போதுமே சாப்பிடும் போது டைனிங் டேபிளில் தான் அண்ணன் கார்த்தி மற்றும் தம்பி யுவன் தங்களின் இசை கம்போஸிங் பற்றி அப்பாவிடம் பேசுவார்கள். பேச ஆரம்பித்து விட்டால் போதும் எனக்கு ஒரே மன உளைச்சலாக மாறிவிடும். அப்போ சகோதரர்களின் இசையில் உள்ள குறைகளை வெளிப்படையாக சுட்டிக் காட்டுவார். இந்த வரிகள் எல்லாம் வேண்டாம் நெகட்டிவாக இருக்கு என பல கரெக்ஷன்கள் சொல்வார். அந்த இடமே ஒரு போர்க்களம் போல மாறிவிடும் என பவதாரிணி தனது த்ரோபேக் பேட்டியில் பேசியிருந்தார். அவரது மறைவு காரணமாக அவர் பேசிய பழைய பேட்டிகளை எல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











