அந்த பாட்டை கேட்டு பாட்டி அழுதுட்டாங்க.. அப்பா சொல்றதை தான் செய்யணும்.. பவதாரிணி த்ரோபேக் பேட்டி!
சென்னை: இளையராஜாவின் அன்பு மகளான பவதாரிணி புற்றுநோய் காரணமாக கடந்த டிசம்பர் 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47. சிறு வயதில் இருந்தே அப்பா, அண்ணன் மற்றும் தம்பியின் இசையை கேட்டே வீட்டில் வளர்ந்த பவதாரிணி அவரும் பல பாடல்களை பாடியும் 10 படங்களுக்கும் மேல் இசையமைத்தும் இசைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் இளையராஜாவின் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சை செய்வதற்காக சென்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை பவதாரிணியின் உடல் கொண்டு வரப்பட்டது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி: சென்னை திரும்பிய நடிகர் சிம்பு விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு விஜயகாந்த் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சிவகுமார், ஸ்ரீகாந்த், ஷோபா சந்திரசேகர், லிங்குசாமி, வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அம்மா அருகே அடக்கம்: பண்ணைபுரம் தான் இளையராஜாவின் சொந்த ஊர். அங்கே தான் மறைந்த இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அம்மா அருகே மகள் பவதாரிணியின் உடலையும் அடக்கம் செய்ய நேற்று நள்ளிரவே தேனிக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கே ஊர் மக்கள் மற்றும் சொந்தங்கள் தற்போது வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பவதாரிணி த்ரோபேக் பேட்டி: 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பவதாரிணி அளித்த பேட்டியில் தனது வீட்டில் காலையிலேயே அம்மா பாட்டு சிடியை போட்டு விடுவார் என்றும் குழந்தை பருவத்தில் இருந்தே வீட்டில் இசையை மட்டுமே கேட்டு வளர்ந்தேன். அதுவே எனக்கு ஸ்ட்ரெஸ்ஸையும் கொடுத்தது என்று பேசியிருந்தார்.
பாட்டி அழுதுட்டாங்க: ஒருமுறை அப்பா "என்ன பெத்த ஆத்தா" பாடலை கரகாட்டாக்காரி படத்துக்காக கம்போஸ் பண்ணிவிட்டு வந்து வீட்டில் பாடி காட்டினார். அந்த பாட்டை கேட்டு அப்படியே என் பாட்டி எமோஷனலாகி அழுதுட்டாங்க.. அதே போல "கண்மணி அன்போடு காதலன்" பாடல் முடித்ததும் வீட்டுக்கு வந்து அப்பா அந்த பாட்டை போட்டுக் காட்டினார் என பவதாரிணி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
அப்பா சொல்றதை தான் செய்யணும்: பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒண்ணு" பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலை அப்பா பாடச் சொல்லும் போது நான் எந்த எக்ஸ்ட்ரா ட்யூனையும் சேர்த்து பாடிடக் கூடாது. நான் வேறமாதிரி ராகமா பாடினேன். அவர் அதெல்லாம் வேண்டாம், ஃபிளாட்டா பாடினா போதும்னு சொல்லிட்டார். அவர் சொல்றதை தான் செய்யணும், அப்படி செஞ்சதனால தான் விருது கிடைத்தது. நிறைய விஷயங்களையும் என் அப்பாக்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன் என பவதாரிணி ரொம்பவே யதார்த்தமாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











