ஹார்மோன் கோளாறு.. பிரபல பிக் பாஸ் நடிகைக்கு அவசர அறுவைச் சிகிச்சை.. முன் கூட்டியே ஷூட்டிங்!
மும்பை: பிரபல பிக் பாஸ் நடிகைக்கு அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதால் முன் கூட்டியே ஷூட்டிங் நடக்கிறது.
தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர், ஹிமான்ஷி குரானா.
முன்னால் மிஸ் லூதியானாவான இவர், சில பஞ்சாபி படங்களிலும் நடித்திருக்கிறார். இசை ஆல்பங்களின் வழி சினிமாவுக்கு வந்தவர் இவர்.

இந்தி பிக் பாஸ்
ஏராளமான இசை ஆல்பங்களில் பங்கேற்றுள்ளார். சல்மான் கான் நடத்திய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர். இதையடுத்து அவர் இன்னும் பிரபலமானார். இவர் சோவ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

பிக் பாஸ் காதல்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின் அவர் காதலை திடீரென முறித்துக் கொண்டார். இதை அவர் அப்போது அறிவித்திருந்தார். பிறகு பிக் பாஸ் வீட்டில் தனது சக போட்டியாளராக இருந்த ஆசிம் ரியாஸை காதலிக்கத் தொடங்கினார். இருவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் காதலித்து வருகின்றனர்.

PCOS பிரச்னை
இந்நிலையில் நடிகை ஹிமான்ஷி, கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், தனக்கு PCOS பிரச்னை இருக்கிறது என்றும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றும் இதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். 'PCOS என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் சுரப்பி அதிகரிப்பதால் ஏற்படும் சினைப்பை நோய் அறிகுறி.

ஆக்சிஜன் மாஸ்க்
இது ஒரு ஹார்மோன் கோளாறு. சில நேரம் என் ரத்த அழுத்தம் ஒரேயடியாக குறைந்து ஆக்சிஜன் மாஸ்க் அணிய வேண்டியது இருக்கும். நான் வீட்டில் இருக்கும்போது போனை தொடாதபடி என் குழு என்னை பார்த்துக் கொள்கிறது' என்று கூறியிருந்தார். இந்நிலையில் வீல் சேரில் அமர்ந்தபடி அவர் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சை
இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதினர். இந்நிலையில் அவர் தாங்க முடியாத வலி காரணமான வீல் சேரில் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். அதன் ஷூட்டிங்கில் பங்கேற்க வீல் சேரில் சென்றார். அவருக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெற இருக்கிறது. அதற்காக முன் கூட்டியே ஷூட்டிங் நடந்து வருகிறது என அவருக்கு நெருங்கியவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











