Exclusive: "பிக் பாஸ் வீட்டிற்கு போகும் ஸ்ரீரெட்டி"... இதை நம்பலாமா கூடாதானு தெரியலையே?
பிக் பாஸ் 3ல் கலந்து கொள்வது பற்றி பேசியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
சென்னை: பிக் பாஸ் 3யில் கலந்து கொள்வது பற்றி இணையத்தில் வெளியான தகவல் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.
சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. இந்த ஒரு தகுதி போதுமே பிக் பாஸில் கலந்து கொள்ள. கடந்த சீசனிலேயே இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கிலும் இந்த வாரம் ஆரம்பமாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது என்ற அறிவிப்பு வந்தவுடனேயே இம்முறை ஸ்ரீரெட்டியும் பங்கேற்பார் என இணையத்தில் அவரது பெயர் பலமாக அடிபட்டது.

ஸ்ரீரெட்டி பேட்டி:
அதனை உறுதி செய்வது போல், ஸ்ரீரெட்டியும் பிக் பாஸில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேட்டிகளில் தெரிவித்தார். தனது பேஸ்புக் பக்கத்திலும் ரசிகர்களிடம், ‘நான் எந்த பிக் பாஸில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் தமிழா, தெலுங்கா?' என கேள்வி எழுப்பினார். இதனால் அவர் நிச்சயம் தமிழில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை.

டிவிட்டர் பதிவு:
இந்தச் சூழ்நிலையில் அவர் பெயர் கொண்ட டிவிட்டர் பக்கம் ஒன்றில், ‘நான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறேன்' என ஒரு பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த டிவிட்டர் பக்கம் ஸ்ரீரெட்டியின் அதிகாரப்பூர்வ பக்கம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் தெலுங்கு பிக் பாஸுக்கு தான் செல்கிறார் என தகவல்கள் பரவியது.

நோ சொன்ன ஸ்ரீரெட்டி:
இது தொடர்பாக ஸ்ரீரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அவர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார். அதோடு தனக்கு பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் மட்டுமே கணக்கு இருப்பதாகவும், டிவிட்டரில் இல்லை என்றும் அவர் கூறினார்.

வெயிட் அண்ட் ஸீ:
ஆனால், ஸ்ரீரெட்டியின் இந்தப் பேச்சை எந்தளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. ஏனென்றால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. எனவே, இல்லை இல்லை எனச் சொல்லிக் கொண்டே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











