குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்
இயக்குனர் சேரனின் பங்களிப்பு இல்லாமலேயே நடந்து முடிந்திருக்கிறது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல்.
சென்னை: இயக்குனர் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சமயத்தில் நடந்து முடிந்திருக்கிறது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் நடக்காமல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது சரியான நடைமுறையல்ல எனக்கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ரமேஷ் கண்ணா, மனோபாலா என பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்களிலும் ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகிறவர் சேரன். ஆனால் தனது இயக்குனர் குடும்பத்துக்குள் நடக்கும் எந்த விஷயமும் தெரியாமல், தற்போது ஹாயாக பிக் பாஸ் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறார் சேரன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் சேரன் தான். அதேபோல் இயக்குனர் சங்கத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளுக்கு பின்னால் சேரன் இருந்திருக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒருமனதாக இயக்குநர் சங்கத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
எப்போதுமே சினிமாவை தனது குடும்பம் என்றே குறிப்பிடுவார் சேரன். ஆனால் இன்று அந்த குடும்பத்தில், அதுவும் தனது இயக்குனர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் சேரன் இருப்பது உண்மையில் வேடிக்கை தான். அவர் வெளியில் வந்த பிறகு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











