Fire: எனக்கு மட்டும் ஏன் இப்படி... செய்தியாளர் முன் கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் பாலாஜி!
சென்னை: பிக் பாஸ் பிரபலமான பாலா முருகதாஸ் மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஃபயர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தை ஜே சதீஸ்குமார் இயக்கி தயாரித்துள்ளார். நாகர்கோவிலில் காசி என்ற நபர் பல பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த கதையை மையமாக வைத்துதான் ஃபயர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலா காசி ரோலில் நடித்துள்ளார்.
இன்று படம் வெளியான நிலையில்,தியேட்டரில் மக்களோடு சேர்ந்து ஃபயர் படம் பார்த்த பாலாஜி முருதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது. ஃபயர் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்து நடித்தது குறித்து, நான் கொஞ்சம் கூட வருத்தப்படவே இல்லை. இந்த கதாபாத்திரத்தில் தான் எனக்கு எல்லாவிதமான என்னுடைய நடிப்பையும் திறமையையும் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், பயில்வான் ரங்கநாதன் என் படத்தை பார்த்துவிட்டு, பாலாஜி முருகதாஸுக்கு நடிக்கவே தெரியல, முகத்தில் எந்தவிதமான எக்ஸ்ப்ரஷனும் இல்லை என்று கூறியிருந்தார். அதை நான் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என் முதல் படத்தில் எனக்கு மானிட்டரை பார்ப்பதற்கு கூட நேரமில்லை, 30 நாளில் படத்தை முடித்தோம்.

பாலாஜி முருகதாஸ்: ஒருவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று முத்திரை குத்துவது ஏன்? அதை இருப்பவர்களிடம் ஒருவிதமாக இல்லாதவர்களிடம் ஒரு மாதிரி ஏன் நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவருக்கு விளையாட கிரவுண்டே கொடுக்காமல் அவருக்கு ஆட தெரியாது என்று சொல்வது சரியானதாக இருக்காது. முதலில் அவருக்கு கிரவுண்டை கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் அவருக்கு ஆட தெரியுமா, தெரியாதா என்பதை பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவனும் இருக்கிறார்கள் நாம் ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும் போதும், எழுதும் போதும் அவர்களுடைய மரியாதை, அவர்களின் தன்நம்பிக்கை குறையாத வகையில் எழுதினால் நன்றாக இருக்கும்.
கண் கலங்கிய பாலாஜி: தயாரிப்பாளராக இருந்தாலும், இயக்குனராக இருந்தாலும் சரி இளைஞர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து அவர்களின் நேரத்தை வீணாக்கக்கூடாது. ஏன் நேரத்தை இப்படி வீணாக்குறீங்க என்று கேட்டால் உனக்கு நடிக்க தெரியாது என்று சொல்வது எல்லாம் என்னால் மன்னிக்கவே முடியவில்லை என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி பேசினார். அப்போது அருகில் இருந்த செய்தியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி, படம் ரொம்ப நன்றாக வந்து இருக்கிறது. நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தாலும், கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறீர்கள் நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இருக்கும் என்று ஆறுதல் கூறினர்.


Click it and Unblock the Notifications











