ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் பிரபலம் கவின்..? டாடா கொடுத்த சக்சஸ்க்கு கை மேல் பலன்!
சென்னை: பிக் பாஸ் புகழ் கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் இந்த வாரம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கணேஷ் பாபு இயக்கத்தில் கவினுடன் அபர்னா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து டாடா படத்தை படக்குழுவினருடன் சேர்ந்து கமல்ஹாசன் நேற்று பார்த்து ரசித்தார்.
கவின் உள்ளிட்ட டாடா படக்குழுவினருடன் கமல் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

பிக் பாஸ் புகழ் கவின்
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் கவின். அதேநேரம் பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவினுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே, பிபி 3 தான் ரசிகர்களின் பேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. கவின் சாண்டி மாஸ்டர், முகேன் ஆகியோரின் அட்ராசிட்டியை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.

ஹிட் அடித்த டாடா
பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் தற்போது கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. கவின் ஜோடியாக பீஸ்ட பட புகழ் அபர்னா தாஸ், முக்கியமான கேரக்டர்களில் பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்தப் படம் இளம் தம்பதியினர் பெற்றோரானால் அவர்களின் நிலை என்னவாகும் என காமெடியாகவும் சென்டிமெண்டலாகவும் பேசுகிறது.

படக்குழுவை பாராட்டிய கமல்
இந்நிலையில், டாடா படத்தை நடிகர் கமல்ஹாசன் பார்த்து ரசித்தார். கவின் உள்ளிட்ட படக்குழுவினருடன் டாடா படத்தை பார்த்த கமல், அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். நேற்றைய தினம் நடந்த இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பை கவின் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உண்மையாகியுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கவின்
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து லிஃப்ட், டாடா படங்கள் மூலம் ரசிகர்களிடம் ரீச்சாகியுள்ளார் கவின். மேலும் நடிப்பு, காமெடி என வெரைட்டியாகவும் ஸ்கோர் செய்து வருகிறார். இதனையடுத்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னோட்டமாகவே டாடா படத்தை கமல்ஹாசன் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











