பிக்பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் ஓவர்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?.. விரைவில் டும் டும் டும்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி; அந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிறகு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இப்போது பெரிதாக ஸ்க்ரீனில் தலை காட்டாத அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இளைஞர்களும், இளம் பெண்களும் தன்னெழுச்சியாக மெரினாவில் கூடி; ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் ஒருமித்த குரலை கொடுத்தார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு குரல் கொடுத்தவர்தான் ஜூலி. அரசியல் தலைவர்களை எல்லாம் தனது கோஷங்களால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜூலி; அந்தப் போராட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி: அந்த சமயத்தில்தான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமடைந்த ஜூலியை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்கள். அந்த சீசனில் ஜூலி மட்டும்தான் திரைத்துறையை சேராத பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகம் பரிச்சயம் ஆனதால்; அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன செய்யப்போகிறார் என்பதை காண்பதற்காகவே ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவும் ஆரம்பித்தார்கள்.

ஓவர் நெகட்டிவ்: நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சில வாரங்களில் ஜூலி மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயமே இருந்தது. ஆனால் ஓவியாவுடன் நடந்த சண்டை ஒன்றில் அவர் செய்த தகிடுதத்தத்தை பார்த்து அனைவருமே ஜூலியை வெளுக்க தொடங்கிவிட்டார்கள். கமல்ஹாசன்கூட உங்களுக்கு Hallucination இருக்கிறதோ என்று கேட்க; உடைந்து அழுதேவிட்டார் ஜூலி. எனக்கு இந்த நிகழ்ச்சியும் வேண்டாம், பிரபல்யமும் வேண்டாம் என்று கதறினார்.
சில படங்களில்: அவர் வேண்டாம் என்று சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேற்கொண்டு பிரபல்யத்தை கொடுக்கத்தான் செய்தது. அந்த வீட்டிலிருந்து வெளியேறிய அவர் சில படங்களிலும் சில சீரியல்களிலும் தலைகாட்டினார். தொடர்ந்து வாய்ப்புகள் வரும்; எப்படியாவது திரைத்துறையில் நடிகையாக ஜொலித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த ஜூலிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இப்போது பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
நிச்சயதார்த்தம் ஒவர்: இந்நிலையில் ஜூலிக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. இதில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தாலும்; தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிடவில்லை. மாறாக மாநாடு படத்தில் இடம்பெற்ற மெகஹரசைலா பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பதால்; ஒருவேளை ஜூலியின் கணவர் ஒரு இஸ்லாமியராக இருப்பாரோ என்று பலரும் கருதுகிறார்கள்.
நிச்சயதார்த்த புகைப்படங்களோடு, "என் முழு உலகையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதன் மீது அதிக பற்று இருக்க முடியாது. நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான், இப்போது அவன் எப்போதும் என்னுடையவன். உள்ளே பூட்டப்பட்டது. மோதிரம் பாதுகாக்கப்பட்டது. மனம் நிறைந்தது. (நீ அவனை பார்க்கும் வரை காத்திரு. ஆனால் இப்போதைக்கு, அவர் சரியானவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











