‘டாடா‘ வெற்றி விழா மேடையில்.. இறந்த நண்பனை நினைத்து கண்கலங்கிய கவீன் !
சென்னை : டாடா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் இறந்த தனது நண்பனை நினைத்து கண்கலங்கி பேசினார் நடிகர் கவின்.
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

நடிகர் கவின்
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான கவின், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவின் பின் சுற்றிக் கொண்டே இருந்தார்.இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் கவின் வெளியேறினார். வெளியே வந்த பின் லாஸ்லியாவை சந்திக்கவே இல்லை.

லிஃப்ட்
பிக் பாஸ்க்கு பின் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் கவின் லிஃப்ட் படத்தில் நடித்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஐடி நிறுவனத்தில் நடக்கும் பிரச்சனைகளை இப்படம் அப்பட்டமாக காட்டி இருந்தது. த்ரில்லர் கலந்த திகில் படமான இப்படத்தில், கவின், அமிர்தா ஐயர், காயத்ரி ரெட்டி, ராகுல் தாதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

டாடா வித்தியாசமான கதை
லிப்ட் படத்தைத் தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டாடா. கல்லூரி மாணவர்களான கவின் மற்றும் அபர்ணா தாஸும் காதலிக்கின்றனர். எல்லை மீறி பழகி திருமணத்திற்கு முன்பே தவறு செய்து விடுகிறார்கள். இதனால், தாய்மை அடையும் அபர்ணா, கருவைக் கலைக்க மறுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் பிரிந்து தனியாக வாழ்கின்றனர்.

டாடா படத்தின் கதை
வறுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து ஆத்மார்த்தமான காதல் காணாமல் போய்விடுகிறது. குழந்தை பெற்ற பின் அபர்ணா பெற்றோருடன் சென்றுவிட குழந்தையைத் வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் கவின், பார்த்து பார்த்து தனது குழந்தையை வளர்க்கிறான். டாடா திரைப்படம் சற்று வித்தியாசமாக இருப்பதால், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டாடா வெற்றி விழா
இந்நிலையில் டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் பேசிய கவின் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதில், இது என்னுடைய 12 வருட கனவு என தெரிவித்தேன். அதை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியவர்களுக்கு நன்றி.

கண்கலங்கிய கவின்
ஒரு சாதாரண மனிதன் தினமும் தன்னை நம்பி, தன் வேலையை நம்பி நேர்மையாக உழைத்தால், ஒருநாள் நாம் நினைக்கும் இடத்திற்கு சென்றிடலாம் என்ற நம்பிக்கையை ஆழமாக மனதில் விதைத்ததற்கு நன்றி. இந்த படத்தை என் நண்பன் மணிகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவன் இப்போது உயிரோடு இல்லை, நான் டிவியில் வரும் பொழுது விசில் அடித்து ரசித்தவன் அவன் தான். அவன் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பான். அவனுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றியது அதற்காகத்தான் இந்த படம். எங்கிருந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாய் என நம்புகிறேன் மச்சான் இந்த படம் உனக்காக என கண்கலங்கி பேசினார்.


Click it and Unblock the Notifications











