வந்தாச்சு பிக் பாஸ்… இனி தினமும் கொண்டாட்டம் தான்… குஷியான ரசிகர்கள் !
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்தியில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 சீசன் முடிந்துள்ளது. இந்த ரியாலிட்டி ஷோவை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 டிசம்பரில் முடிந்ததை அடுத்து, தற்போது பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல தமிழில் சீசன் 5 நிகழ்ச்சி ஜனவரியில் முடிந்த நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கினார். இதில், ரியாலிட்டி ஷோவில் சூரஜ் தெலக்காட், லக்ஷ்மி பிரியா, பிளெஸ்லீ, அகில் குட்டி, தன்யா மேரி வர்கீஸ், சூரஜ் தெலக்காட், டெய்சி டேவிட், ஷாலினி நாயர், தில்ஷா பிரசன்னன் என 16 சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
3வது சீசனின் போது கொரோனாவின் இரண்டாவது அலையால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர், பின்னர் உள்ளூர் அதிகாரிகளால் பிக் பாஸ் வீடு சீல் வைக்கப்பட்டது, மேலும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதற்காக ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தி அந்த சீசனின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி உள்ளதால், தமிழிலும் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கமல் ஹாசன் ஏற்கனவே சீசன் 6ல் சந்திப்போம் என்று கூறியுள்ளார். 6வது சீசனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications