பிக் பாஸ் சீசன் 6: களமிறங்கும் கானா பாடல் புகழ் அசல் கோளாறு… இவரு அந்த மாதிரி ஆளாச்சே!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது.
மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்குபெறும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த சீசனின் பிரபல கானா பாடலாசிரியர் அசல் கோளாறும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்கிறார்.

சீசன் 6 தொடக்கம்
விஜய் டிவியில் ரொம்பவே பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 6வது சீசன் பிக் பாஸ் இன்று முதல் தொடங்குகிறது. இதில், பெண் போட்டியாளர்கள் 10 பேரும் ஆண்கள் 9 பேரும், திருநங்கை ஒருவரும் பங்கேற்கின்றனர். இதனால், பிக் பாஸ் சீசன் 6 போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக எகிறிப் போயுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 6ல், நடிகர் அஸிம், கலக்கப் போவது யாரு அமுதவாணன், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், பத்திரிக்கையாளர் விக்ரமன், ராப் பாடகர் ஆர்யன் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அதேபோல் சின்ன திரை நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, ஆயிஷா, ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, மாடல் அழகி ஷெரீனா, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இவர்களுடன் கானா பாடலாசிரியர் அசல் கோளாறும் பங்கேற்கிறார்.

அதிர வைத்த ஜோர்த்தாலே
afro என்பவருடன் தனியிசைப் பாடல்களை உருவாக்கியுள்ள அசல் கோளாறு, 'ஜோர்த்தாலே' என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அசல் சென்னை கானாவை கொஞ்சம் பட்டி டிங்கரின் செய்து வித்தியாசமான ஃபாஸ்ட் பீட்டுடன் வெளியான இந்தப் பாடல், செம்ம ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில், 'லைஃப் ஆப் பேச்சுலர்' பாடலை எழுதியுள்ளார்.

பிக் பாஸில் தாக்குப் பிடிப்பாரா?
வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கோளாறாக மாற்றிவைத்துள்ளார். அதற்கேற்றபடியே கொஞ்சல் கோளாறாக பேசுவதிலும் இவர் பிரபலம். இந்நிலையில், அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. பார்ப்பதற்கு எப்போதுமே ரஃப் அண்ட் டஃப்பாக இருக்கும் அசல் கோளாறு, சக போட்டியாளர்களையும் கோளாறாக்கி விடுவாரா அல்லது டைட்டிலை வின் செய்வாரா என்பதை பார்க்க மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பிக் பாஸில் அசல் கோளாறின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











