Wayanad: சரிந்து கிடக்கும் வயநாடு.. குவியும் அப்பாவிகளின் சடலங்கள்.. களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!
வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 270க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக கேரள அரசே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலர் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் நடுங்கிக் கொண்டும் கண்ணீர் மல்கவும் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை துவங்கியது. அப்போதிருந்தே அங்கு கன மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை அடித்து துவைத்து வந்தது.

நிலச்சரிவு: தென்மேற்குப் பருவமழை துவங்கி கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு மேலான நிலையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்தான், வயநாடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மீட்புப் பணிகள்: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும் மீட்புத் துறையினர் மூலமாக பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

நிவாரணப் பொருட்கள்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் உணவின்றி, தண்ணீரின்றி கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.
அபிஷேக் ஸ்ரீகுமார்: போர்க்கால அடிப்படையில் நடைபெறும் இந்த மீட்புப் பணியில் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6இல் மூன்றாவது இடத்தினைப் பெற்று கேரள மக்களின் அன்பைப் பெற்றவர் அபிஷேக் ஸ்ரீகுமார். இவர் வயநாட்டில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தன்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். அரிசியும் உப்பும் வழங்கியுள்ள அபிஷேக் ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " வயநாட்டுக்காக.. வயநாட்டில் இப்போது உள்ள நிலைமையை பார்க்கும்போது நான் செய்வது ஒன்றும் இல்லைதான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது முதன் முதலில் உப்பு இல்லாமல் சாப்பாடு சாப்பிடவேண்டியதாக போய்விட்டது. அது இன்றைக்கும் மனதில் இருக்கின்றது. அதனால்தான் அரிசியும் உப்பும் வழங்கியுள்ளேன். மேலும் மக்கள் தாங்களாகவே, ஜாதி, மதம், இனம் கடந்து பல இடங்களில் நிவாரணப் பொருட்களை தன்னெழுச்சியாக சேகரித்து வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இப்போது என்னை பெருமை மிகு மலையாளியாக உணருகின்றேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











