Archana :சிக்கலில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. வனத்துறையிடம் சிக்கும் அளவுக்கு என்ன பண்ணாங்க?
திருவண்ணாமலை: உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும் சின்னத்திரை நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன் வனத்துறை தடை உத்தரவை மீறி ஏறி வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, பௌர்ணமி நாட்களில் மட்டுமே மலையை சுற்றி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும். மற்ற நாட்களில் வனத்துறையின் முன் அனுமதி இன்றி மலைப்பகுதிக்குள் யாரும் நுழையவோ, ஏறவோ முடியாது. இந்த விதிமீறல் குறித்து வனத்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை (அருணாச்சலம்) ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பஞ்சபூதத் தலங்களில் இது நெருப்பை (அக்னி) குறிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமான் இங்கு ஜோதி வடிவாக நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. "அண்ணாமலையைத் தொழுதாலே முக்தி" என்ற நம்பிக்கையுடன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இம்மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில், எட்டு திசைகளிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை வணங்கி செல்வது இங்கு வழிபடும் பக்தர்களின் வழக்கம். பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கிரிவலப் பாதையில் செல்கிறார்கள்.
வனத்துறையின் தடை: வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலையார் மலையில் ஏற, நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் ஓரிரு தினங்களுக்கு முன் வனத்துறையிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார். இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விதி மீறல்: அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் இந்த மலையேற்றம் தொடர்பான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில், "மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்ததால் மிகுந்த அச்சம் அடைந்ததாகவும்" குறிப்பிட்டிருந்தார். மேலும், "மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள்" என்றும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தினார்.
விசாரணை: வனத்துறை தடையை மீறி மலை ஏறியது ஒருபுறம் இருக்க, பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்ற அவரது சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வனத்துறையின் தடையை மீறிய அர்ச்சனாவின் மீது வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அர்ச்சனா தான் பகிர்ந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











