ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்று திரட்டும் ஆரி.. இலவசமாக சந்திக்க ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன், தனது ரசிகர்களை வரும் ஞாயிறு அன்று நேரில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரிக்கு அந்த வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் எதிர்ப்பாக இருந்த நேரத்தில் அவருக்கு ஓட்டுப் போட்டு கடைசி வரை ஜெயிக்க வைத்த ரசிகர்கள் தான் பக்க பலமாக இருந்தனர்.
உள்ளே இருக்கும் போதே இதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்ட ஆரி, வெளியே வந்த பிறகும் அந்த மக்கள் சக்தியை விட்டு விடாமல் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்.

நேரில் சந்திக்கலாம்
நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியாக வரும் ஞாயிற்றுக் கிழமை ஒரு அருமையான ஏற்பாட்டை ஆரி செய்துள்ளார். நடிகர் ஆரியை அந்த நிகழ்ச்சியில் நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது.

என்ன நிகழ்ச்சி
மக்களுக்கு முதல் வணக்கம் எனும் நிகழ்ச்சியின் மூலமாக நடிகர் ஆரி தனது ரசிகர்களை வரும் ஞாயிற்றுக் கிழமை நேரில் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியை சேர்ந்த ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்க உள்ளார். ஆச்சி மசாலா இந்த நிகழ்ச்சியை நடத்த ஸ்பான்சர் செய்துள்ளது.

அனுமதி இலவசம்
ரசிகர்களை எல்லாம் வரவழைத்து டிக்கெட் போட்டு கல்லா கட்ட ஆரி நினைக்கிறார் என யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காக, இந்த நிகழ்ச்சியை இலவசமாகவே நடத்துகிறார் ஆரி. ஓ.எம்.ஆரில் உள்ள மெரினா மாலில் வரும் பிப்ரவரி 21ம் தேதி மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

எதுக்கு இந்த விழா
தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை நடிகர் ஆரி நடத்த திட்டமிட்டுள்ளாரா? இப்படி ஒரு ஏற்பாட்டுடன் ஒரு விழாவை நடத்த அது மட்டுமா காரணமாக இருக்கும். விவசாயம், சமூகப் பணிகள் என செயலாற்றி வரும் நடிகர் ஆரி, தனது ரசிகர் பலத்தை பயனுள்ள விஷயங்களுக்காக செலவிட திட்டமிட்டே இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் ஆர்வம்
பிக் பாஸ் முடிந்ததும், ஆரியை மறந்து விட்டு குக் வித் கோமாளி பார்க்க சென்று விடுகிறார்களா ரசிகர்கள், இல்லை தனக்காக வருகிறார்களா என்று பார்க்க இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்துள்ள அறிவிப்பை ஆரி அறிவித்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











