உதயநிதியை கடுமையாக விமர்சித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. இவங்க பிரச்னையில என்னதான்ப்பா நடக்குது?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியை அறிவித்த விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகம் செய்தார். கட்சி கொடி குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலா, தான் தவெகவில் இணையப்போவதாகவும், தனக்கு திமுக பிடிக்கவே இல்லை எனவும் கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் அவரது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டு விஜய் டீடிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னர் பாலா. இவர் அதற்கு முன்னர் நடைபெற்ற பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு விளையாடினார். இறுதிவரை வீட்டில் இருந்த பாலாவால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இந்நிலைலயில் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலா நேற்று முன் தினம் அதாவது, ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது, எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தவெக கொடி பாடல் போஸ்ட்டை ரீ போஸ்ட் செய்திருந்தார்.

இதற்கு யாரோ ஒரு கமெண்ட் செய்ய, அதில் இருந்து தொடங்கியது பிரச்னை. கமெண்ட் செய்தவருக்கு பதில் அளிக்கிறேன் எனக் கூறி, பாலா திமுகவை பலமாக தாக்கிப் பேசி வருகின்றார். குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது காட்டமாக விமர்சனங்களை வைத்து வருகின்றார்.
உதயநிதிக்கு சொத்து: பாலா தனது எக்ஸ் தளப் பதிவில், " உதயநிதியின் தாத்தா (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி) சென்னைக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தார். இதற்காக அவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு உதயநிதியிடம் இவ்வளவு சொத்து இருக்கிறதே? எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தான் இவர்களுக்காக நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரம் என கண்ணதாசன் எழுதிய அவரது சுயசரிதமான வனவாசம் புத்தகத்தை எடுத்துக் காட்டுகின்றார், பாலா.

ஊழல்: மற்றொரு பதிவில், "1950ஆம் ஆண்டு எனது தாத்தாவும் சென்னைக்கு வந்தார், உங்களது (உதயநிதி) தாத்தாவும் சென்னைக்கு வந்தார். எனது கேள்வி என்னவென்றால், நீங்கள் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கவில்லை என்பதை நான் நம்பவேண்டுமா? உங்க மொத்த குடும்பமும் ஊழல் செய்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கே தெரியும்" என எழுதியுள்ளார்.

தவெக: மற்றொரு பதிவில், " கனிமொழி அக்கா டாஸ்மாக்குகளை மூடுவதாக போலி வாக்குறுதி கொடுத்தார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் நீட் தடை குறித்து வாக்குறுதி கொடுத்தார். இவையெல்லாம் என்ன ஆனது?" எனவும் மற்றொரு பதிவில், " நான் திமுகவை வெறுக்கின்றேன். எனக்கு குடும்ப அரசியல் மீது துளியும் விருப்பமில்லை. எனக்கு தமிழக வெற்றிக் கழகம் பிடித்திருக்கின்றது. நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகின்றேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அறிவித்திருக்கும் பாலா, திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











