எனக்கு பெற்றோர் இல்லை என்று நான் கவலைப்பட்டதே இல்லை மாமா... சஞ்சீவின் அக்கா மகள் உருக்கம்!
சென்னை: தனக்கு பெற்றோர் இல்லை என்று தான் கவலைப்பட்டதே இல்லை என பிக்பாஸ் சஞ்சீவின் அக்கா மகள் ஷ்ரேயா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ். பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பெரும்பாலும் விஜய்க்கு நண்பராக அவரது படங்களில் நடித்துள்ளார்.

ஹேட்டர்ஸ் இல்லை
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வைல்டு கார்ட் என்ட்ரியான சஞ்சீவ், ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சரியாக அனலைஸ் செய்துள்ளார். சரி எது தவறு எது என்பதை சம்பந்தப்பட்டவர்களின் முகத்திற்கு நேராக கூறி வருகிறார்.
இதனால் இதுவரை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சஞ்சீவுக்கு ஹேட்டர்ஸ் இல்லை என கூறப்படுகிறது.

அக்கா மகளின் உருக்கமான பதிவு
இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பேசிய சஞ்சீவ், தனது அக்காவான நடிகை சிந்து எப்படி மரணமடைந்தார் என்பது குறித்தும் அதன்பிறகு அவரது மகள் ஷ்ரேயாவை அப்பா ஸ்தானத்தில் இருந்து வளர்த்தது குறித்தும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

சந்தோஷமான சிறப்பான தருணம்
இந்நிலையில் சஞ்சீவின் அக்கா மகள் ஷ்ரேயா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மாமா சஞ்சீவ் குறித்தும் தனது கணவர் அஷ்வின் குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, 'என் வாழ்க்கையில் நடந்திருக்கும் மிகவும் சந்தோஷமான சிறப்பான தருணம் இது. இந்த நாளுக்காக தான் நான் 12 ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டுகொண்டிருந்தேன்.

டவுன் ஆக விடமாட்டோம்
நான் காதலிக்கிறேன் என்று என்னுடைய மாமா சஞ்சீவ்விற்கு அது தெரிந்த போது அவர் என்னை நம்பினார். அதே அளவு அஸ்வினும் பல கஷ்டங்களை கடந்து சாதிப்பார் என்று நம்பினார். என்னை பெற்றவர்களை விட அதிகமான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். எனவே, நானும் அஸ்வினும் அவரை பெருமை கொள்ளும் அளவுக்கு நடந்துகொள்வோம். எப்போதும் அவரை நாங்கள் டவுன் ஆக விடமாட்டோம்.

ஆனந்தக் கண்ணீர் வருகிறது
இந்த படத்தின் டிரைலரை சஞ்சீவ் மாமா பார்க்க மாட்டார் என்று நான் கவலையாக இருந்த போது இது நடந்தது. இந்த உலகமே பார்க்கும் வகையில் அதுவும் ஒரு ஜாம்பவான் முன்பு இந்த படத்தின் ட்ரெய்லரை அவர் கண்டார். இதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இதை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த தருணத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பூரித்துப் போனதாக கூறினார்கள்.

பெற்றோர் இல்லை என்று கவலைப்பட்டது இல்லை
அஸ்வின் நீ எங்களை மிகவும் பெருமையடைய செய்துவிட்டாய். என் மாமா மீது நான் அன்பு வைத்திருப்பது வேறு ஆனால், நீயும் அதே அளவு அன்பை அவர் மீது வைத்திருக்கிறாய். என்னுடைய கனவை நனவாக்கியதற்கு நன்றி, உங்கள் இருவருக்கும் நன்றி. எப்போதெல்லாம் எனக்கு ஒரு சாதாரண குடும்பம் இல்லையே என்று நான் வருத்தப்பட்ட போது நீங்கள் இருவரும் அதை தவறு என்று உணர்த்தி இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் வரை இதுவரை நான் எனக்கு பெற்றோர்கள் இல்லையே என்று கவலைப்பட்டது இல்லை. என்னுடைய குடும்பமே எனக்கு பலம் இதைவிட வேறு சந்தோஷம் கிடையாது.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஷ்ரேயா.
Recommended Video

அன்பறிவு ட்ரெய்லர் ரிலீஸ்
கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அன்பறிவு படத்தின் ட்ரெயிலர் பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் முன்னிலையில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் படத்தின் இயக்குநரும் ஷ்ரேயாவின் கணவருமான அஷ்வின் மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸின் தியாகராஜன், நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











